பாகம் 28
பரிட்சைகள் அனைத்தும் முடிந்து விட்டதால், மிகவும் சோகமாக இருந்தாள் வர்ஷினி. இனி அவளால் கல்லூரிக்கு செல்ல முடியாதல்லவா. நிமலை பார்க்கவும் இனி சந்தர்ப்பம் கிடைக்காது.
அப்போது அவளுடைய அறைக்கு வந்த ரிஷி, அவளை சாப்பிட அழைத்தான். அவனுடன் சென்றாள் வர்ஷினி. இப்பொழுது கல்பனா ஓரளவு தேறி இருந்தார்.
"அம்மா, உங்களுக்கு இப்ப பரவாயில்லயா?" என்றாள்.
"ம்ம்ம் "
"ரொம்ப வலிக்குதாம்மா?"
"இப்போ பரவாயில்ல"
அமைதியாக சாப்பிட தொடங்கினாள் வர்ஷினி.
"நம்ம நாளைக்கு ஒரு கல்யாணத்துக்காக செங்கல்பட்டு போறோம்." என்றார் கல்பனா.
"ஆனா, நாளைக்கு அக்காவுக்கு கடைசி எக்ஸாம் இருக்கே" என்றான் ரிஷி.
அவனை வெறித்துப் பார்த்தாள் வர்ஷினி. ஏனென்றால் அவளுக்கு பரிட்சை முடிந்து விட்ட விஷயம் அவனுக்கு தெரியும். ரிஷி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். உன்னிடம் அப்புறம் பேசுகிறேன் என்று கண்ணால் ஜாடை காட்டினான்.
"ஓ அப்படியா...? சரி அப்போ நீ இங்க இரு. நாங்க ரிஷியை மட்டும் கூட்டிக்கிட்டு போறோம். லட்சுமி உன் கூட இருப்பா. நாங்க விடியற்காலையிலேயே கிளம்பிடுவோம். கொஞ்சம் லேட்டா தான் வருவோம்."
சரி என்று தலையசைத்த வர்ஷினியை
ரிஷி அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். திருமணத்திற்கு செல்ல பிடிக்காமல் தான் ரிஷி அப்படி ஒரு பொய்யைக் கூறினான். ஆனால் அது இப்போது அவனுக்கே விணையாகிவிட்டது."நானும் அக்காவோட இருக்கேனே..." என்றான்.
"இல்ல... யாரும் வரலன்னா அப்பா கோச்சிக்குவார்"
அய்யோ என்றானது ரிஷிக்கு. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்றார்கள். ரிஷி வர்ஷினியின் அறைக்கு ஓடிவந்தான்.
"எனக்கு எக்ஸாம் இருக்குன்னு ஏன் பொய் சொன்ன?"
"அக்கா, கல்யாணத்துக்கு போனா ஒரே வெறுப்பு... ஆளாளுக்கு என்னென்னமோ கேள்வி எல்லாம் கேப்பாங்க... அப்பறம் தனியா இருக்கணும். ஒரே போர்... நானும் உன்கூட சேர்ந்து தப்பிக்கலாம்னு பார்த்தேன். ஆனா வசமா மாட்டிகிட்டேன்" என்றான் சோகமாக.