பாகம் 57
சுதாவின் இல்லத்திற்கு செல்ல அனைவரும் தயாரானார்கள். தன்னை நிமல் தடுக்காததை நினைத்து வர்ஷினி ஆச்சரியம் அடைந்தாள். அவளை தன்னுடன் இருக்குமாறு அவன் கேட்கவில்லை. அவளும் கூட, அவன் ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் நினைத்தாள். கடந்த இரு தினங்களாக அவனுக்கு சரியான உறக்கமில்லை. மேலும், வேறு ஒருவர் வீட்டில் இருக்க அவனுக்கு பிடிக்காது என்பதும் அவளுக்குத் தெரியும். அதனால் அவனை தங்களுடன் வருமாறு அவள் கேட்கவில்லை. வீட்டில் யாரும் இல்லாவிட்டால் அவன் ஓய்வெடுத்து தானே தீர வேண்டும்...?
"நாங்க கிளம்பறோம்... நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க" என்றாள் வர்ஷினி.
சரி என்று தலையசைத்தான் நிமல்.
"நீங்க அப்செட்டா இருக்கீங்களா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"நான் வீட்ல இருக்கவா?"
வேண்டாம் என்று வேறெங்கோ பார்த்தபடி தலையசைத்தான்.
"அப்புறம் எதுக்கு முகத்தை பரணை மேல தூக்கி வச்சிருக்கீங்க?"
"நீயும் அவங்களோட போறேன்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லயே..."
"எனக்கே இப்ப தான் சொன்னாங்க"
"ம்ம்ம்"
"கொஞ்சம் சிரிங்களேன்..."
"ஈஈஈ" என்று பல்லை கட்டினான் நிமல்.
களுக் என்று சிரித்தாள் வர்ஷினி.
"ஜாக்கிரதையா போயிட்டு வா"
"நான் ரிஷியை என்கூட கூட்டிகிட்டு போகட்டுமா?" என்றாள் தயங்கி.
அவளை நம்ப முடியாமல் பார்த்தான் நிமல்.
"அவன் கிளாசை பங்க் பண்ணான்னு உங்க அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது?" என்றான்.
"அவங்க அவ்வளவு மும்முரமாயெல்லாம் அவனை கவனிக்கிறவங்க கிடையாது. நம்ம லீவ் லெட்டர் கொடுத்துட்டா, அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல"
"ஆர் யூ ஷ்யூர்?"
"ரிஷி இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருக்க போறான். அதுவரைக்கும் அவன் சந்தோஷமா இருக்கட்டுமே..."