பாகம் 49
வர்ஷினியை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதான் ரிஷி. வர்ஷினியின் கண்களும் மனமும் கலங்கியது என்று கூறத் தேவையில்லை. அவள் நிமலை நோக்கி தன் தலையை உயர்த்த, அவன் வலி நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய அந்தப் பார்வை, ரிஷியின் வார்த்தைகளுக்கு சாட்சியம் சேர்த்தது. விஸ்வநாதன் மற்றும் பார்வதியின் நிலையும் கூட, நிமலை போலவே இருந்ததை அவள் கவனித்தாள்.
வர்ஷினி தன் தந்தையை எப்பொழுதும் வெறுத்தது இல்லை, அவர் எவ்வளவு மோசமானவராக இருந்த போதிலும்...! ஆனால் இன்று, அவரை தன் தந்தை என்று கூறவே அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவளுடைய தந்தை ஒரு கொலைகாரன். அவரால் நேரடியாக பாதிக்கப்பட்டவனோ, தன் உயிரையும் தந்து அந்த கொலைகாரனின் மகளை காக்கிறான்... என்ன கொடுமை இது...!
வர்ஷினிக்கு தலை சுற்றியது. அவளை அணைத்துக் கொண்டு நின்ற ரிஷி, அதை உணர்ந்து, அவளை ஏறிட்டு நோக்கினான்.
"அக்கா..."
அவளை நோக்கி ஓடிச் சென்றார் பார்வதி. அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். அரைவாசி திறந்திருந்த அவளுடைய கண்கள், விடாமல் கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர தவித்தது.
"வர்ஷு... ரிலாக்ஸா இரு" என்றார் பார்வதி.
அவர் அவளுக்கு தண்ணீர் கொடுக்க, அதை வேண்டாம் என்று மறுத்தாள் வர்ஷினி.
அவள் தலை நிமிர்ந்து நிமலை பார்க்க, அவன் தன் தலையை இடவலமாக அசைத்து அழாதே என்று சைகை செய்தான். அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று நினைத்திருந்த போது, இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று அவள் மனதில் இருந்த எண்ணம், எப்பேர்பட்ட மனிதன் இவன்...! என்று உருமாற்றம் பெற்றது.
என்ன நடந்திருக்க கூடும் என்பதை அவள் யூகித்து பார்த்தாள். தன்னுடைய பெற்றோரை கொன்றவனின் மகள் என்ற உண்மை தெரியாமலேயே தன்னிடம் அவன் காதல் வயப்பட்டு இருக்கிறான். அந்த உண்மை தெரிய வந்த பொழுது, அவளிடமிருந்து விலகிச் செல்ல நினைத்திருக்கிறான். ஆனால், வர்ஷினி அதற்கு இடம் தரவில்லை. தன்னுடைய காதலின் ஆழத்தை அவனுக்கு புரிய வைத்து, அவனை அப்படி செய்ய விடாமல் தடுத்து விட்டாள். அவளுடைய தந்தை தான் தன்னுடைய பெற்றோர்களை கொன்றவன் என்ற உண்மை தெரிந்திருந்தும் கூட, அவள் மீது அவன் கொண்டிருந்த காதல், சிறிதும் குறையவில்லை. அவளுடைய தந்தையின் செயலில் அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டதற்காக வருத்தப்பட்டாள் வர்ஷினி.