பாகம் 22
குமணன் இல்லம்
தன் கையில் இருந்த முத்திரைத் தாள்களை பார்த்துக்கொண்டு நின்றார் கல்பனா. அதில் எப்படி குமணனின் கையெழுத்தை பெறுவது என்ற சிந்தனையுடன் இருந்தார் அவர். எவ்வளவு புத்திசாலித்தனமாக யோசித்த போதிலும், அவருடைய புத்திக்கு எதுவுமே எட்டவில்லை. ஏனென்றால், அவர் செய்ய இருப்பது மிகவும் அபாயகரமான விஷயம். ஒருவேளை அவர் பிடிபட்டால், அவருடைய கதை ஒட்டுமொத்தமாய் முடிந்து போகலாம். அவர் அவசரப்படாமல் காரியம் ஆற்ற வேண்டும். சரியான சந்தர்ப்பம் கிடைத்தாலே ஒழிய அவர் எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்று நினைத்தார். அப்போது வீட்டினுள் நுழைந்த வர்ஷினியை பார்த்தார் கல்பனா.
வெள்ளை தங்கத்தில் மோதிரத்தை அணிந்து கொண்டு, சுதா கொடுத்த சமையல்கலை புத்தகத்துடன், இங்கும் அங்கும் பதட்டமாய் பார்த்துக்கொண்டு அவள் உள்ளே நுழைந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே கல்பனாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது. அவளுடைய மூச்சு, அவள் நுரையீரலை விட்டு வெளியேற மறுத்தது. புத்தக அலமாரியின் பக்கத்தில் அசைவின்றி அப்படியே நின்றாள். தன் கையிலிருந்த சமையல்கலை புத்தகத்தை மெல்ல அலமாரிக்குள் திணித்துவிட்டு, கல்பனாவை நோக்கி திரும்பினாள்.
"சீக்கிரம் ரெடியாகு. கார்த்திக் இங்க வரப் போறான்"
தலைகுனிந்தபடி சரி என்று தலையசைத்துவிட்டு, அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,
"இரு"
அவள் அருகில் வந்து, மோதிரம் அணிந்திருந்த அவள் கையைப் பிடித்து இழுத்தார் கல்பனா.
"யார் இதை உனக்கு கொடுத்தது?"
"சுதா கொடுத்தா. இது தான் எங்களுக்கு கடைசி வருஷம்... அதனால..." என்றாள் திக்கித்தினறி.
"சரி. சீக்கிரமா போய் ரெடியாகு. ஏதாவது நல்ல ட்ரெஸ்ஸா போட்டுக்கோ"
சரி என்று அவசரமாய் தலையசைத்து விட்டு, விட்டால் போதுமென்று ஓடிப்போனாள் வர்ஷினி. அவளுடைய அறைக்கு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். கார்த்திக் அவர்கள் வீட்டிற்கு வர கூடாது என்று அவள் கடவுளை வேண்டிக் கொண்டாள். அவன் அருகில் இருந்தாலே அவளுக்கு சங்கடமாய் போகிறது.