பாகம் 8
தன் விதியை நொந்தவாறு தன் அறையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் நிமல். அவன் வாழ்வில் பல பெண்களை கடந்து வந்திருக்கிறான். அதில் சிலர், அவனிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரிடத்திலுமே அவனுக்கு ஈர்ப்பு என்பது எழுந்ததே இல்லை. முதல் முறையாக அவனுக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது...! அந்த பெண்ணை விடாமல் துரத்தினான்... அவளுக்கு வேண்டியதை வரிந்து கட்டிக்கொண்டு செய்தான்... அவளிடம் அவன் காதலை கூறுவதற்கு முன்பாக, அவனுடைய காதல் முறிந்தும்விட்டது.
வர்ஷினி குமணனின் மகள். உலகத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் விட்டுவிட்டு, அவள் மீது அவனுக்கு ஏன் காதல் வந்தது? முதல் பார்வையிலேயே அவன் ஏன் தன்னை முழுமையாக அவளிடம் இழந்தான்? எதற்காக விதி அவனை அவள் முன் அழைத்துச் சென்று நிறுத்தியது? அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
"வர்ஷினினினி..." என்று கதறினான்.
இதிலிருந்து அவன் எப்படி வெளிவரப் போகிறான் என்று அவனுக்கு புரியவேயில்லை.
*இல்லை... நீ தைரியம் இழந்துவிடாதே. அவளைப் பற்றி நினைக்காதே. அவள் ஒரு விஷப் பாம்பின் வாரிசு. அவளுக்கும் அவளுடைய தந்தையின் குணம் தான் இருக்கும். அவளுக்காக நீ பலவீனம் அடையாதே. அவளிடம் நெருங்காமல் பார்த்துக் கொள். அதுவே உன்னை ஆசுவாசப்படுத்தும்* என்று தனக்குத் தானே அறிவுரை கூறிக் கொண்டான் நிமல்.
கல்லூரி
வர்ஷினியை தவிர்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான் நிமல். அவள் முன்பு வரக் கூட இல்லை அவன். ஆனால் அதை செய்யக்கூடாது என்று அவன் வர்ஷினியை தடுத்துவிட முடியாது அல்லவா...? அவள் அவனைத் தேடி வந்தாள். அவளைப் பார்க்காதவன் போல வேறு பக்கமாக சென்றுவிட்டான் நிமல். அவனுடைய செயல் வர்ஷினிக்கு விசித்திரமாய்பட்டது. அவன் அவளை தவிர்க்கிறான் என்பதை புரிந்து கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அந்த நாள் முழுவதும் அது தொடர்ந்தது.