பாகம் 19
பங்குச்சந்தையில் தனக்கு ஏற்பட்டிருந்த நஷ்டத்தை, எவ்வாறு சரி கட்டுவது என்பதை பற்றி தீவிரமாய் சிந்தித்தபடி இருந்தார் கல்பனா. அவர் எவ்வளவு தான் யோசித்த போதிலும், அவருடைய மனதில் எந்த ஒரு வழியும் பிறக்கவே இல்லை. இறுதியில் ஒரு அருமையான உபாயம் தோன்றியது அவருக்கு. அவருடைய முகம் பிரகாசம் அடைந்தது. அவர்களுக்கு புறச் சென்னையில் ஒரு நிலம் இருந்தது. பல வருடங்களுக்கு முன், அதை வாங்கியிருந்தார் குமணன். இந்நேரம், நிச்சயம் அவர் அதை மறந்திருப்பார். அந்த நிலத்தை, அவருக்கு தெரியாமல், அவருடைய கையெழுத்தைப் பெற்று விற்று விட்டால், ஏராளமான பணம் கிடைக்கும். அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, தன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார் கல்பனா.
அவருடைய திட்டத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மீனா. இந்த விஷயம் குமணனுக்கு தெரிந்து விட்டால், அவர்களுடைய கதி என்னவாகும் என்று பயந்து நடுங்கினாள் அவள்.
"இது என்னமோ, நல்ல ஐடியாவா எனக்கு தெரியல மேடம்" என்று மனதில் பட்டதைக் கூறினாள்.
"நமக்கு வேற வழி இல்ல. என்னால வெறுங்கையோட உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. கையில சல்லிக்காசு இல்ல. அதனால இதை நான் நிச்சயம் செஞ்சு தான் தீருவேன்."
"ஒருவேளை, உங்க திட்டத்தை குமணன் சார் தெரிஞ்சுகிட்டா என்ன ஆகுறது?"
"அவருக்கு அந்த நிலத்தைப் பத்தி ஞாபகம் இருக்க வாய்ப்பே இல்ல. அதை நாங்க வாங்கி பல வருஷம் ஆயிடுச்சு. அவர் நிச்சயம் அதை மறந்து போயிருப்பார். நீ எனக்கு ஸ்டாம்ப் பேப்பரை மட்டும் வாங்கி குடு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்."
"அதுல என்ன எழுதிக் கொண்டு வரணும்?"
"அய்யய்யோ... எதுவும் எழுதிடாத. எனக்கு பிளான்க் பேப்பர்ஸை மட்டும் கொடு. அவர்கிட்ட கையெழுத்து வாங்கினதுக்கு அப்புறம், நம்ம என்ன எழுதணுமோ எழுதிக்கலாம். ஒருவேளை அவர் அதை படிச்சா கூட நான் மாட்டிக்கமாட்டேன். எழுதாத பத்திரமா இருந்தா, வேற யாராவது மாட்டிகுவாங்க. நான் தப்பிச்சுடுவேன்"