பாகம் 55
குமணன் மற்றும் கல்பனாவின் வயிறு பசியில் ஓலமிட்டுக் கொண்டிருந்தது. தண்ணீர் இல்லாமல் அவர்கள் தொண்டை வறண்டது. தங்கள் கைப்பேசியில் சிக்னல் கிடைத்து விடாதா என்று அவர்கள் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அந்த பங்களாவில், ஜாமர் மூலம் சிக்னல் முழுமையாய் தடை செய்யப்பட்டு விட்டது அவர்களுக்கு தெரியாது.
தங்களுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பது? அந்த புதிய பங்களாவை பற்றித் தான் யாருக்கும் தெரியாதே...?
குமணனுக்கு நிமலின் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. ஏனென்றால், நிமல் இவ்வளவு தீவிரமய் இருப்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது நிமலின் மிக நீண்ட நெடிய திட்டம்.
அந்த பங்களாவை கட்டியது சாக்ஷாத் நிமல் தான். வர்ஷினியை எவ்வாறெல்லாம் அவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தெரிந்த பிறகு உருவான திட்டம் இது. குமணனை நடுத்தெருவிற்கு கொண்டுவர வேண்டும் என்பது மட்டும் தான் அவனுடைய எண்ணமாக இருந்தது. ஆனால், வர்ஷினி அவன் வாழ்கையில் வந்த பிறகு, அது உணர்வுபூர்வமாக மாறிப் போனது. தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு நின்று நிதானமாய் யோசித்து செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.
ஊட்டியை பூர்விகமாக கொண்ட தனது பினாமியின் பெயரில் அந்த இடத்தை வாங்கினான் நிமல். ஊட்டிக்கு ஒரு மீட்டிங்குகாக சென்ற குமணனை அந்த வீட்டை வாங்கும் படி செய்தான். அதன் கவர்ச்சியும் தொழில்நுட்பமும் குமணனை வெகுவாய் கவர்ந்தது. நிமலின் பினாமியிடம், அந்த பங்களாவை பராமரிக்க ஆட்களை ஏற்பாடு செய்யுமாறு கூறினார் குமணன். நிமலின் ஆட்கள், அந்த பங்களாவை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அந்த பங்களா, மீண்டும் நிமலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இனியவர்களின் இருப்பிடம்
பள்ளியில் இருந்து நேரே இனியவர்களின் இருப்பிடம் வந்த ரிஷி, ஓடிச்சென்று நிமலை அணைத்துக்கொண்டான்.