பாகம் 17
சந்தன கட்டைகளை கொள்முதல் செய்வதற்காக, நிமலை மைசூருக்கு அனுப்பினார் விஸ்வநாதன். அவர்களுடைய நிறுவனத்தின் தணிக்கைக்கு ஒரு வாரமே இருந்ததால், விஸ்வநாதனால் செல்ல முடியவில்லை. அதனால் நிமலை அனுப்பிவைத்தார். அதன் காரணமாக, அவன் ஒரு வாரம் கல்லூரிக்கு வரவில்லை.
அவனை பார்க்காமல் இருந்தது, வர்ஷினிக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. ஆனாலும் அது தவிர்க்க முடியாதது என்பது அவளுக்கு தெரியும். நிமல் கல்லூரிக்கு வந்தால், அவளை பார்க்காமல் இருக்க மாட்டான் என்று தெரிந்தும் கூட, தினமும் அவனுடைய வகுப்பறைக்கு சென்று, அவன் வந்து விட்டானா என்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஒரே வாரத்தில் அவள் சற்று இளைத்து, அவள் முகம் பொலிவிழந்து போனதை, ராஜாவும் பிரகாஷும் கவலையுடன் பார்த்தார்கள்.
நிமலும் அவளை பார்க்காமல் தவித்தான். அவர்கள் முதல் *டேட்*க்கு சென்று வந்த பிறகு, அவன் அவளை சந்திக்கவே இல்லை. அவளை பார்க்க வேண்டும் என்று அவனுக்கும் ஆவலாக தான் இருந்தது. ஆனால் விஸ்வநாதனுடைய விருப்பத்திற்கு மாறாக நடக்க, அவன் விரும்பவில்லை. அதனால் மைசூர் கிளம்பி வந்து விட்டான்.
நிமலுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது, ராஜாவிடம் இருந்து.
"ஹாய் ராஜா... எப்படி இருக்க? ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?"
"நீ எப்போ திரும்பி வர போற? வர்ஷினி பாக்கவே எவ்வளவு பாவமா இருக்கான்னு உனக்கு தெரியுமா?"
"எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறாயா?"
"அவ பாவம் மச்சி..."
"எனக்கு தெரியும்டா. நான் இன்னைக்கு ராத்திரி இங்கிருந்து கிளம்புறேன். நாளைக்கு காலேஜ்க்கு வருவேன்."
"அப்பாடா... இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு"
"எனக்கும் தான். நாளைக்கு சந்திக்கலாம்"
"ஓகே"
அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். வர்ஷினி, சுதாவுடன் வருவதை கண்டான் ராஜா. கட்டை விரலை உயர்த்தி அவன் வர்ஷினியை பார்த்து புன்னகைத்தான்.