பாகம் 30 ( நீண்ட அத்தியாயம் )
வர்ஷினியை தங்கள் இல்லத்தில் எதிர்பார்க்காத அவர்கள், அதிர்ந்து நின்றார்கள். அவளுடைய கண்கள் கட்டுப்பாடின்றி பொழியத் துவங்கியது. அவளுடைய கண்ணீர் நிமலின் உயிரை தின்றது. அவன் உருக்குலைந்து போனான். விஸ்வநாதன் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது அவனுக்கு.
*நீ குமணனைப் பழிதீர்க்க வர்ஷினியை தூண்டில் மீனா பயன்படுத்துவன்னு நான் எதிர்பார்க்கல* என்ற வார்த்தைகள் அவளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஏனென்றால் அதை கூறியது வேறு யாருமில்ல, நிமலின் தந்தை விஸ்வநாதன்.
இல்லை என்று தலை அசைத்தபடி, பின்னோக்கி நகர தூங்கினாள் வர்ஷினி. அது சரியாக படவில்லை நிமலுக்கு. அவன் ஏதோ தவறாக நடக்கப்போவதை உணர்ந்தான்.
"வர்ஷு, நான் சொல்றதை கேளு... என்னை தப்ப நினைக்காதே..." என்று கத்தினான்.
அவன் கூறுவதை கேட்காமல் அங்கிருந்து ஓடத் தொடங்கினாள் வர்ஷினி. ஒரு நொடியும் தாமதிக்காமல் அவளை பின் தொடர்ந்து ஓடினான் நிமல் கத்திகொண்டு.
"வர்ஷினி, ஓடாதே நில்லு... நான் சொல்றதை ஒரு தடவை கேளு... நீ கேட்டது எதுவும் உண்மை இல்ல..."
அவள் நிற்கவோ, எதையும் கேட்கவோ தயாராக இல்லை. ஏனென்றால், அவள் ஏற்கனவே அவன் அப்பா கூறியதை கேட்டு விட்டாள் அல்லவா? அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி ஓடிக்கொண்டே இருந்தாள். வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்த பொழுது, அங்கு நின்று ஒரு முறை திரும்பி நிமலை ஒரு பார்வை பார்த்தாள். அவளுடைய அந்த பார்வை நிமலை திகிலடைய செய்தது.
"நீங்க இல்லனா, நான் செத்துடுவேன்" என்று அவள் அடிக்கடி கூறிய வார்த்தைகள், அப்போது ஏன் அவன் தலைக்குள் ஒலித்தது என்று அவனுக்கு புரியவில்லை.
எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக அவளை நோக்கி ஓடினான். இருந்தும் அவனது முயற்சி பலனளிக்கவில்லை. எதிரில் வேகமாய் வந்த லாரியின் முன்பு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் சென்று விழுந்தாள் வர்ஷினி. அவள் அப்படி செய்வதை பார்த்த லாரி ஓட்டுனர், பிரேக்கை அழுத்தினார். அவர் அதில் பாதி அளவு வெற்றி கண்டார் என்று கூறலாம். அவர் லாரியின் வேகத்தை வெகுவாய் குறைத்தாலும், அது வர்ஷினியை இடித்து தள்ளியது. சிறிது தூரம் தள்ளி சென்று, சாலையில் உருண்டு விழுந்தாள் வர்ஷினி. அவளை இரத்த வெள்ளத்தில் பார்த்து மனதளவில் செத்தான் நிமல்.