பாகம் 29
அடுத்த மூன்று மாதங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து வர்ஷினிக்கு. ஆனால் நிமலுக்கோ, ராக்கெட் வேகத்தில் பறந்து சென்றது. வி பி கம்பெனியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான் நிமல். இருந்த போதிலும், வர்ஷினியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதையும் அவன் தவற விடவில்லை. அம்மன் கோவில் தான் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடம். அந்த ஒரு இடத்திற்கு தான் அவள் பெற்றோரின் அனுமதியோடு அவளால் வர முடிந்தது.
ராஜேந்திரன் என்கின்ற ராஜாவும் தனது கட்சியில் மிகவும் பொறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ராஜராஜன், அவனை அவர்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நியமித்திருந்தார். அவன் முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்ட போதிலும், நிமலுக்கு மட்டும் எப்பொழுதுமே உயிர் தோழனாக தான் இருந்தான்.
வி பி கம்பெனி
நிமலை பார்க்க, அவனுடைய கம்பெனிக்கு திடீர் வருகை தந்தான் ராஜா. நேரே நிமலின் அறைக்குச் சென்று அவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான் ராஜா.
"வாவ்..." என்று கத்தியபடி அவனை கட்டியணைத்துக் கொண்டான் நிமல்.
"எப்படி மச்சான் இருக்க?" என்றான் ராஜா.
"நல்லா இருக்கேன், டா"
"உன்னுடைய இதயராணி எப்படி இருக்கா?"
"நான் உயிரோட இருக்கிற வரைக்கும், அவன் நல்லா தான் இருப்பா" என்றான் புன்னகையுடன்.
ராஜாவின் முகபாவம் மாறியது.
"குமணன் பத்தின உண்மையை நீ எப்போ வர்ஷினிகிட்ட சொல்ல போற?"
"நான் அதை அவகிட்ட எப்பவுமே சொல்றதா இல்ல"
"ஆனா ஏன்?"
"அவ ரொம்ப உடைஞ்சு போயிடுவா. அவங்க அப்பா ஒரு கொலைகாரங்கிறத அவளால தாங்கிக்கவே முடியாது"
"நீ அவரை பழி தீர்க்கும் போது, அவ அதை பத்தி தெரிஞ்சுக்க மாட்டாளா?"
"பழி வாங்கணும்னு நினைக்கிறது அவசியமா?" என்று அவன் கேட்க, பிரமித்துப் போனான் ராஜா.