பாகம் 7
சமையலறையில் நிமல் இருந்ததைப் பார்த்து, உள்ளூர நகைத்தார் பார்வதி. அவன் தேங்காய் பால் தயாரித்ததை பற்றி, ஏற்கனவே கோபாலிடமிருந்து தெரிந்து கொண்டு விட்டார் அவர். மெதுவாய் அவன் பின்னால் வந்து நின்று இருமினார். தன் கண்களை மூடி, நாக்கை கடித்தான் நிமல்.
"நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா, நிம்மு?" என்றார்.
"வேண்டாம் மா. நான் முடிச்சிட்டேன்." என்றான் தன்னை நிலை படுத்திக்கொண்டு.
"நீ இந்த காதலை... அதாவது இந்த பாலை யாருக்காக எடுக்கிறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கிண்டலாக.
தன் கண்களை சுழற்றினான் நிமல்.
"என்னோட ஃபிரண்டுக்கு, மா"
"கேர்ள் ஃபிரண்டா?"
"ஃபிரண்டு... அவ ஒரு கேர்ள்"
"ஓ... என்ஜிஎஃப்... அந்த ஃபிரண்ட் வர்ஷினி தானே?"
"ஆமாம்"
அவர் மீண்டும் கிண்டலாய் இருமினார்.
"அம்மா, இல்லாத கதையை நீங்களே பில்டப் பண்ணாதீங்க"
"அப்படின்னா இருக்கிற கதையை நீயே சொல்லிடு"
"அவளுக்கு அல்சர் இருக்குமா"
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தார் பார்வதி.
"என்னது? அல்சரா? இந்த சின்ன வயசுலயா? எப்படிடா? அவங்க அம்மா, அவளை ரொம்ப பொத்தி பொத்தி பார்த்துக்குவாங்கன்னு சொன்னீயே..."
"அவங்க அம்மா ஒரு சமூக சேவகி. அவங்க எப்பவும் பிஸியா இருப்பாங்க போல இருக்கு. அதனால தான் அவளை பாத்துக்க முடியலன்னு நினைக்கிறேன் "
"எனக்கு வாயில நல்லா வருது... பெத்த பொண்ண பாத்துக்க நேரமில்லயாம்... ஊருகேல்லாம் சமூக சேவை செய்யறாளாம்... என்ன பித்தலாட்டம் டா இது?"
"அவங்க அம்மாவை எப்பவாவது பார்க்கும் போது, இதெல்லாம் நீங்களே அவங்களை கேளுங்க" என்றான் சிரிப்புடன்.
"ஏன் கேட்க மாட்டேன்? அந்த அம்மாவை நான் நேர்ல பார்த்தா நிச்சயமா கேப்பேன். எனக்கு என்னமோ அவங்க அம்மா உண்மையிலேயே அந்த பொண்ணை நல்லா கவனிச்சுக்குற மாதிரி தெரியல. அவ உண்மையிலேயே ஏதோ பிரச்சனைல தான் இருக்கா போல இருக்கு. ( அவன் கன்னத்தை அன்பாய் தொட்டார் ) அவளுக்கு ஏதாவது வேணும்னா என்னை கேக்க சொல்லுடா... நான் எதுவா இருந்தாலும் செய்யறேன்."