பாகம் 52
வர்ஷினியின் கண்கள், அந்த பத்திரத்தின் மீதே இருந்தது. அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? குமணனின் கையெழுத்து, வெற்றுத் தாள்களில் எப்படி வந்தது? மூளையை பிழிந்து யோசித்தாள். அவள் முகத்தை பார்த்து நிமலும் குழம்பிப் போனான்.
"வர்ஷு..."
தன் கையை காட்டி, அவனை அமைதியாக இருக்கும்படி கூற, அவனது குழப்பம் மேலும் அதிகரித்தது.
தன் கண்களை மூடி நடந்தவற்றை யோசித்துப் பார்த்தாள் வர்ஷினி. சில முக்கியமான தாள்கள் காணாமல் போனதற்காக கல்பனா அவளை அடித்தது அவள் நினைவுக்கு வந்தது. என்ன நடந்திருக்கக்கூடும் என்று அவளுக்கு புரிய ஆரம்பித்தது.
அப்படியென்றால், கல்பனா தேடியது இந்த காகிதங்களை தானா...? தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காக, அவர் தான் இந்தத் தாள்களில் குமணனின் கையெழுத்தை பெற்றிருக்க வேண்டும். அதனால் தான், குமணனிடம் அந்த காகிதங்களை பற்றி, ரிஷி அவரைக் கேட்க சொன்ன போது கல்பனா பதட்டமடைந்தாரா...?
மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவளையே குழப்பமாய் பார்த்துக்கொண்டிருந்த நிமலை பார்த்தாள் வர்ஷினி. அவனருகில் வந்தமர்ந்தாள்.
"எங்க அப்பா உங்ககிட்ட இருந்து பறிச்ச எல்லா சொத்தையும் திருப்பி வாங்குற சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைச்சா என்ன செய்வீங்க?"
தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாய் அவளைப் பார்த்துவிட்டு, புன்னகைத்தான்.
"எனக்கு அந்த சொத்து வேண்டாம்"
தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை அவனிடம் நீட்டினாள் வர்ஷினி. அதைப் பார்த்த நிமலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, சில பேப்பர்ஸ் காணோம்னு எங்கம்மா என்னை அடிச்சாங்க..."
கேட்டவுடன் அவனுக்கு கோபம் கொந்தளித்தது. அதற்காகத் தான் அவன் கல்பனாவிற்கு வசமாய் திருப்பி கொடுத்து விட்டானே...!