பாகம் 12
ஒரு வாரத்திற்கு பிறகு
குமணன் இல்லம்
குளியலறையில் சோப்பு இல்லாததைக் கண்டு எரிச்சல் அடைந்தார் குமணன். துண்டை சுற்றிக்கொண்டு, வெளியே வந்தார்.
"கல்ப....னா..." என்று காட்டுகத்து கத்தினார்.
"என்ன ஆச்சுங்க?" என்று பரபரத்தார் கல்பனா.
"உன்னால ஒரு சாதாரண விஷயத்தை கூட கவனிக்க முடியாதா? இதைக்கூட செய்யாம வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்க? பாத்ரூம்ல சோப்பு இருக்கான்னு கூட பாக்க முடியாதா உன்னால? உதவக்கரை... போய் சோப்பு கொண்டுவா... "
கல்பனாவுக்கு உதர ஆரம்பித்தது. வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக ரிஷி, எல்லா சோப்பையும் எடுத்து சென்றுவிட்டதை அவர் சுத்தமாக மறந்தே போனார். அவர் கார் ஓட்டுநரை அழைத்து, அருகில் இருக்கும் கடையில் இருந்து, அவர்களுடைய கம்பெனியின் சோப்பை வாங்கி வருமாறு உத்தரவிட்டார். குமணனின் கோபத்தை பற்றி நன்றாக அறிந்த அந்த ஓட்டுநர், சோப்பு வாங்கிவர தலைதெறிக்க ஓடினர்.
இரண்டே நிமிடத்தில், மூச்சு வாங்க ஓடி வந்து, சோப்பை கல்பனாவிடம் கொடுத்தார். மீண்டும் குமணன் கத்த ஆரம்பிக்கும் முன், அதை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தார் கல்பனா. ஆனால் அவருடைய கெட்ட நேரம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கத்தி கூச்சல் போட்டார் குமணன். அவரிடம் வழங்கப்பட்ட சோப்பு மிக மோசமான வாசனை வீசியது. அது அவர்களுடைய நிறுவனத்தின் சோப்பே அல்ல. ஆனால், அது அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட மேலுறைக்குள் இருந்தது. இது எப்படி நடந்தது? அவருடைய நிறுவனத்தின் சோப்புகள் உலக பிரசித்தி பெற்றவை. அவருடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அனைத்து ஒப்பந்ததையும் ரத்து செய்த பொழுது, அவருக்கு காரணம் விளங்காமல் இருந்தது. இப்பொழுது அவருக்கு புரிந்துவிட்டது, அவருக்குத் தெரியாமல் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது. உடனடியாக அனைத்தையும்... அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டும்... குமணன் எச்சரிக்கையானார்.