பாகம் 25
சாமி கும்பிட்டு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயாரானாள் வர்ஷினி. அவர்களுக்கு அன்று பரிட்சை ஆரம்பமாகிறது. அப்பொழுது லட்சுமி, கார்ட்லெஸ் ஃபோனை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தாள். சுதாவை தவிர வேறு யாராக இருக்கப் போகிறார்கள்? ஏதாவது பிரச்சினையா? எதற்காக இந்த நேரத்தில் அவள் ஃபோன் செய்கிறாள்? லக்ஷ்மியிடமிருந்து ரிசீவரை வாங்கி பேசினாள்.
"சுதா..." என்றாள் அவசரமாக.
"ஹாய் பேபி..." என்று அவள் சர்வ சகஜமாக கூப்பிட, நிம்மதி பெருமூச்சு விட்டாள் வர்ஷினி.
"எக்ஸாமுக்கு தயாரா?" என்றாள் வர்ஷினி.
"நான் தயாராயிட்டேன். நீ...?"
"நானும் தயார் தான்"
"சரி, எதுக்கு இப்ப ஃபோன் பண்ண?"
"நீ அந்த சமையல் புக்கை படிச்சிட்டியா?"
"எக்ஸாம் டைம்ல நான் எப்படி அதை படிக்க முடியும்? எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் படிக்கலாம்னு இருக்கேன்"
"அப்போ ஒன்னு பண்ணு"
"என்ன?"
"அந்த புக்கை எடுத்துகிட்டு வா. அம்மா படிக்கணும்னு சொன்னாங்க. எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம், நான் அதை உனக்கு திருப்பி கொடுக்கிறேன்"
"ஓகே"
"தேங்க்யூ"
"காலேஜ்ல பார்க்கலாம்"
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். வரவேற்பறைக்கு வந்து, புத்தக அலமாரியில் இருந்த சமையல் கலை புத்தகத்தை எடுத்து, தன் பையில் திணித்துக் கொண்டு, கல்லூரிக்கு கிளம்பினாள் வர்ஷினி.
கல்லூரியில்
நிமலை தேடியபடியே காரை விட்டு கீழே இறங்கினாள் வர்ஷினி. ராஜா மற்றும் பிரகாஷுடன் நின்று கொண்டிருந்த அவன், அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவளுடைய கார் காலேஜை விட்டு செல்லும் வரை மெல்ல நடந்தவள், அதன் பிறகு நிமலை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.