பாகம் 16
வர்ஷினியை வழியனுப்பிவிட்டு, நேரே கேன்டீனுக்கு வந்தான் நிமல், அவனுடைய நண்பர்கள் அங்கு இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன். அவனுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அவர்களுடன் சுதாவும் இருந்தாள். வர்ஷினி வாங்கி கொடுத்த கைகடிகாரம், நிமிலின் கையில் இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தாள் சுதா.
"உன்னுடைய ஃபர்ஸ்ட் டேட் எப்படி இருந்தது?" என்றான் ராஜா.
"அமேசிங்" என்றான் நிமல்.
"வர்ஷினி எங்க?" என்றாள் சுதா
"வீட்டுக்கு போய்ட்டா"
"நேரம் ஆயிடுச்சா?" என்றாள் சுதா கை கடிகாரத்தை பார்த்தபடி,
"சுழியன் மச்சம் இருக்கா?" என்றான் பிரகாஷ் ஆர்வமாக.
நிமல் இல்லை என்று தலையசைக்க, அவன் சோகமானான்.
"நேத்து தானே அவ்வளவு சுழியன் சாப்பிட்ட?" என்றான் ராஜா.
"பெரியம்மா செய்யுற சுழியனை எவ்வளவு சாப்பிட்டாலும் ஆசை தீராது" என்றான் பிரகாஷ்.
"வர்ஷினிக்கு சுழியன் ரொம்ப பிடிக்கும்" என்றாள் சுதா.
"எங்கிட்ட நீ ஏற்கனவே சொல்லியிருந்த. ஆனா, எல்லாத்தையும் காலி பண்ற அளவுக்கு அவளுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியாது" என்றான் பிரகாஷ் சோகமாக.
விளையாட்டாய் அவன் தலையில் தட்டினான் ராஜா.
"நான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும், சுதா" என்றான் நிமல்.
"வர்ஷினியை பத்தியா?" என்றாள் அமைதியாக.
"ஆமாம்... அவளைப் பத்தி தான்"
"அவளைப் பத்தி என்ன தெரியணும் உங்களுக்கு?"
"எல்லாம்... அவளைப் பத்தி ஒன்னு விடாம எல்லாம் தெரியணும்..."
"என்ன திடீர்னு?"
"அவ வாழ்க்கையில யாருக்கும் தெரியாத எதோ ஒன்னு மறைஞ்சிருக்கிற மாதிரி எனக்கு தோணுது. அவ சந்தோஷமா இல்லன்னு நான் ஆணித்தரமா நம்புறேன். அதை அவ என்கிட்ட சொல்ல தயங்குறதையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. அவளை நான் சங்கடபடுத்த விரும்பல. அதனால தான், அவளை பத்தி நான் உன்கிட்ட கேக்குறேன்"