பாகம் 24
குமணனிடம் இருந்து கையெழுத்தைப் பெற்று விட்டதால், கல்பனா சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தார். அவர் மீனாவுக்கு ஃபோன் செய்ய, அவள் உடனடியாக எடுத்து பேசினாள்.
"சொல்லுங்க மேடம்"
"நான் சொல்றத கவனமா கேளு. நான் அவர்கிட்ட வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டேன்" என்றார் பெருமிதத்துடன்.
"செம்ம சூப்பர், மேடம்" என்று குதூகலித்தாள் மீனா.
"எனக்கு டாக்குமெண்ட் எழுத ஒரு நல்ல லாயர் வேணும். அவரை எங்க வீட்டுக்காரருக்கு தெரியக்கூடாது."
"நான் ஏற்பாடு பண்றேன், மேடம்"
"சீக்கிரம் செய்"
"நான் லாயர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்"
அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை, ஏதோ பொக்கிஷத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் கல்பனா. அவரைப் பொருத்தவரை அது பொக்கிஷம் தானே...? அதை பூஜை அறையில் ஒளித்து வைக்கலாம் என்று அவர் கீழ் தளத்திற்கு வந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாய், கைப்பேசியில் பேசியபடி குமணன் வீட்டினுள் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் கல்பனாவின் முகம் இருண்டு போனது. தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை ஒளித்து வைக்க ஒரு நல்ல இடத்தை இங்குமங்கும் தேடினார். நேரே புத்தக அலமாரியை நோக்கி ஓடி சென்றவர், அங்கிருந்த ஒரு புத்தகத்தில் அந்த தாள்களை திணித்து வைத்தார்... ஆம், அது வர்ஷினிக்கு பிறந்தநாள் பரிசாய் சுதா கொடுத்த சமையல் கலை புத்தகம் தான்.
கல்பனா குமணன் பேசுவதைக் கவனித்தார்.
"ஆமாம். நான் அதை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். அப்போ அந்த இடம் பாக்குறதுக்கு காடு மாதிரி இருந்தது. ஆனா இப்போ அது சில கோடி பெருமானமுள்ளதா இருக்கு. அதனால தான், எங்க கம்பெனியோட புது குடோனை அந்த இடத்துல கட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சிட்டிக்கு வெளியில் இருக்கிறதால டிரான்ஸ்போர்ட் பிரச்சனை இருக்காது. இன்னும் ஓரிரு வாரத்துல வேலையை ஆரம்பிச்சிடுவேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.