பாகம் 37
விருந்தினர் அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, முகம் சுளித்தாள் வர்ஷினி. ஏனென்றால், பார்வதி கதவை தட்ட மாட்டார். அது விஸ்வநாதனாக இருந்தால், அவள் பெயரை சொல்லி அழைப்பார். வந்திருப்பது நிமலாக இருக்குமோ என்று அவளுக்கு பதற்றம் ஏற்பட்டது. அவனை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை. மெல்ல கதவை நோக்கி சென்றாள். கதவைத் திறந்து பார்த்தவளுக்கு, அங்கு கோபாலன் நின்று இருந்ததை பார்த்து நிம்மதி ஏற்பட்டது. அவர் உள்ளே வந்து, மூன்று பைகளை அங்கே வைத்தார்.
"இதெல்லாம் என்னது?" என்றாள் வர்ஷினி.
அவளைப் பார்த்து சிரித்து விட்டு, அங்கிருந்து பதில் கூறாமல் சென்றார் கோபாலன்.
"கோபாலன் அண்ணா, நில்லுங்க... பதில் சொல்லுங்க..."
அங்கிருந்து ஓடிப்போனார் கோபாலன். அவள் கோபாலனை அழைப்பதைக் கேட்டு அங்கு வந்தார் பார்வதி.
"என்ன ஆச்சு, வர்ஷு?"
"கோபாலன் அண்ணன் இந்த பேக்கை எல்லாம் கொண்டு வந்தார். என்னன்னு கேட்டா, எதுவுமே சொல்லாம ஓடிப் போய்ட்டாரு"
"அதை திறந்து பார்த்தா, என்னன்னு தெரிஞ்சிட போகுது..." என்றார் பார்வதி வர்ஷினியோ தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
"சரி, நான் பார்க்கிறேன்"
ஒரு பையை திறந்த போது, அதில் விதவிதமான டிசைனர் புடவைகள் இருந்தது.
"நிம்மு தான் இதை எல்லாம் உனக்காக அனுப்பியிருக்கான்"
மற்றொரு பையில், வேறு சில உடைகள் இருந்தன. அவை அனைத்தும், வர்ஷினி வழக்கமாய் அணியக்கூடிய விதத்தில் இருந்தன. அதையெல்லாம் பார்த்து பேச்சிழந்து நின்றாள் வர்ஷினி. அவளுடைய முகத்தை ஓரப் பார்வையால் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் பார்வதி.
கடைசி பையை திறந்து பொழுது பார்வதியே கூட திகைத்து தான் போனார். அதில் ஒரு பெண்ணுக்கு தேவையான அனைத்தும் இருந்தது. தன் விழிகளை அகல விரித்து, அவர் வர்ஷினியை பார்க்க, அவள் சிலை போல் நின்றிருந்தாள். அவள் இது வரை, *அ முதல் ஃ* வரை என்றால் என்ன என்பதை பார்த்ததே இல்லை. இப்பொழுது கண்ணெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சோப்பும், தேங்காய் எண்ணெயும் என்றால் பரவாயில்லை. அதெல்லாம் சாதாரணமாக பெண்கள் உபயோகிப்பது தான். ஆனால் இங்கு, சேஃப்டி பின், ஹேர் டிரையர், நெயில் ஃபைல், ஃபுட் ஸ்க்ரப்பர், என எல்லாமே இருந்தது.