"ரகுபதி....... நீ என்ன கூறுகிறாய்?....." என்று மாதவன் கேட்க
"நான் என்ன கூறுகிறேன் என்று அறிந்து தான் கூறுகிறேன்....... நான் கூறுவது தான் சரி, நாம் இப்போது புறப்பட தயாராகலாம்....." ரகுபதி கூறினான்
சற்றே யோசனையோடு அனைவரும் புறப்பட தயாரானார்கள்
அப்போது நயனாவுக்கு வைஷ்ணவியின் நினைவு வந்தது "வைஷ்ணவியின் தாய் தந்தை நம்மோடு வரவில்லை எனில்....., வைஷ்ணவியையாவது நம்மோடு அழைத்து செல்லலாம் அல்லவா?...." நயனா கேட்டாள்
"இல்லை......... யாரையும் அழைத்து செல்ல வேண்டாம், நாமோ அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறோம்....... ஆனால் அவர்களோ நம் மனதை சஞ்சல படுத்துகிறார்கள்" சற்று கோபத்தோடு கூறினான் மாதவன்
"மாதவா....... நீ கூறுவது தவறு, வைஷ்ணவியின் இடத்தில் நமது பவானி இருந்திருந்தால் இப்படி விட்டு செல்வோமா?.... இந்த இடத்திலேயே அவள் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது, அவளை இங்கு விட்டு செல்வது தவறு.....
அவளுக்கு ஒரு நல்வாழ்வை அமைத்து தர வேண்டும் என்று,என் மனம் கூறிக் கொண்டே இருக்கிறது...." ரகுபதி எடுத்துரைத்தான்
அச்சமயம் அங்கு வந்தாள் வைஷ்ணவி "ஏன் அனைவரும் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள்?..... புறப்பட தயாராகி விட்டீர்களா?......"வைஷ்ணவி கேட்டாள்
ஒருவரை ஒருவர் பார்த்தவாறே அனைவரும் நின்றிருந்தனர்
" உனது தாய் எங்கே?....அவரை நாங்கள் சந்திக்க வேண்டும்" ரகுபதி கூறினான்
"அப்படியா?.... இதோ அழைத்து வருகிறேன் "என்றவாறு தாயை அழைக்க ஓடினாள் வைஷ்ணவி
"வைஷ்ணவியின் தாய் இதற்கு சம்மதிப்பாரா?....." குழப்பத்தோடு கேட்டாள் மீரா
"அவர் சம்மதித்தால் அவளை நம்மோடு அழைத்து செல்லலாம், இல்லையெனில் அவளை இங்கேயே விட்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை" ரகுபதி கூறினான்
சற்று நேரத்தில் அங்கு வந்தாள் வைஷ்ணவியின் தாய் துர்கா
"என்னை பார்க்க வேண்டும் என்று கூறினீர்களாமே...." துர்காவின் குரல் இது