அஸ்வந்த் குளக்கரை படிகளில் வேட்டியை பிடித்தபடி இறங்கினான். அவன் வருவதை பார்த்த தோழிகள்,
''ஏய் தேனு உன் வீட்டுக்காரர் உன்னைத்தேடி இங்கு வந்துட்டார்டி.." கோரசாக சொல்ல, தேன்மொழி சட்டென்று எழுந்து கொண்டவள், புடவை தடுக்கி குளத்துக்குள் விழப்போக, அஸ்வந்த் பிடித்திருந்த வேட்டியின் பிடியை விட்டு சட்டென்று எட்டு வைத்து அவளை தாங்கி பிடித்தான்.
''ஹே என்ன அவசரம்? கொஞ்சம் கால் தவறி இருந்தா தலையில் அடிபட்டு விழுந்திருப்பே" அவன் அக்கறையுடன் சொல்ல தேன்மொழிக்கு நெஞ்சம் அதிவேகமாக துடித்தது.
அவள் அவனை பார்த்தாள். பதட்டத்துடன் எழுந்தது தான் தெரியும். புடவை தடுக்கியது தோன்றவில்லை. தோழிகளும் கவனிக்கவில்லை. அஸ்வந்தோ வேட்டியோடு போராடிக்கொண்டிருந்தவன் அதை மறந்து தன்னை காப்பாற்ற ஓடி வந்த வேகமும், தன்னை தாங்கிய விதமும் அவளுக்கு நினைத்து பார்க்கவே பெருமை பிடிபடவில்லை.
படபடப்பில் இருந்து மீண்டவளாக தோழிகளை பார்த்தாள். அவர்களும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இவர்களை பார்த்து சிரித்தனர். அதைப்பார்த்தவள் அப்போது தான் உணர்ந்தாள் கணவன் தன் இடையை பற்றியபடி இருப்பது. சட்டென்று அவசர அவசரமாக அவனின் பிடியிலிருந்து விலகியவள் மறுபடியும் விழப்பார்க்க ,
''ஹேய் வாட் ஹேப்பெண்ட்?"
''சாரிங்க நீங்க வர்றீங்கன்னு அவசரத்தில எழ முயற்சி செய்தேன்" என்றாள் அவனது முகத்தை பார்த்து.
''இட்ஸ் ஓகே ! நீ விழுந்திடப்போறே என்று தெரிந்ததும் என்னோட காஸ்டியூமைக்கூட மறந்துட்டேன். நல்ல வேளை நானும் விழலை" அவன் சிரிப்புடன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.
''கமான்! அம்மா உன்னை அழைச்சுட்டு வரச்சொன்னாங்க. சாப்பிடணும் வர்றியா? இது அழுது" என அவன் தனது வயிற்றை தொட்டுக்காட்ட அவள் பதறியவளாக,
''ஆத்தாடி ! நீங்க அத்தை, மாமா கூட சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்.. சாப்பிடலையா?"