இந்தியா
பரமசிவம் மாளிகையின் ரெண்டு அறைகளை தவிர மற்ற அறைகளுக்கு ஏசி பூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அவரது வலது கையான கணக்கு பிள்ளை , கணபதியாரின் மேற்பார்வையில் வேலையாட்கள் ஏசியை பூட்டிக்கொண்டிருந்தனர்.
கணக்கு பிள்ளையிடம் அன்றைய கணக்குகளை ஒப்படைக்க தேன்மொழி சென்றிருந்தாள். எதுவென்றாலும் அவள் மாளிகையின் வெளி வாசலில் நின்று பேசுவதை பேசிவிட்டு செல்வதுதான் அவளது வழக்கம். பரமசிவமும் வள்ளியம்மையும் எத்தனை தடவைகள் உள்ளே அழைத்தும் அவள் சென்றது கிடையாது. அதற்கு காரணமும் இருந்தது. ஒரு தடவை நெஞ்சில் தீ வைத்தது போல கணக்கு பிள்ளையும் அவரது கூட்டாளி கார்மேகமும் சொன்ன வார்த்தை தான்.
'காலைத்தொட்டு கூழைக்கும்புடு போட்டு மேல்தட்டு வர்க்கத்துக்கு அடிமையாக இருந்த சாதி! எங்க காலை கழுவி அந்த தண்ணீரை குடிச்சுத்தான் உயிர் வாழ முடியும்! அதுவும் நாமாக காலை தந்தால் தான்! அப்படிபட்டவங்க பெரிய இடத்தில காலை வைக்குறது மட்டுமல்ல மூச்சுக்காற்று கூட வீசும்படி நடக்க கூடாது!" என்று அவர்கள் இறுமாப்பாக பேசியது அவளது பதினைந்தாவது வயதில். இன்று வரை அவளால் அந்த சொற்களையும் மறக்க முடியவில்லை. அதை பேச வைத்த மேல்தட்டு வர்க்கத்தையும் விரும்பியதும் இல்லை.
'இவர்களே கை கட்டி சம்பளம் வாங்கும் சாதி இதில என்ன அகங்காரம்?" என மனதுக்குள் கறுவிய நாட்களும் உண்டு. இவள் வாசலில் நிற்பதை பார்த்த பரமசிவம்,
'அடடே தேன்மொழி ஏம்மா அங்கேயே நின்னுட்டே? உள்ளே வாயேன்!" அவருக்கு இவளது குணம் தெரிந்தும் வா என்று அழைக்காத நாள் இல்லை.
'இல்லைங்கய்யா! இன்னிக்கு வரவு, செலவு, ஏற்றுமதி செய்தது எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்..! ஐயா பார்த்து சொல்லிட்டீங்கன்னா.." அவள் பணிவாக சொல்லியவாறு அவர் பார்வைக்கு சகலதையும் வைத்தாள்.
'என்ன புள்ள நீ? நீ பார்த்த கணக்கை நான் என்னைக்கு சரி பார்த்திருக்கேன்? கணக்கு பிள்ளையிடம் கொடுத்திடு! வழக்கம் போல நீயும் ஒரு கணக்கு வைத்திரு!". அவர் சொல்லிக்கொணடிருக்க, வள்ளியம்மை மோர் எடுத்து வந்து அவரிடம் நீட்டியபடி,