பரமசிவம் மாளிகை.
பரமசிவம் ஒருபக்கம் முகம் முழுதும் களை இழந்து போய் இருக்க சோபாவில் அமர்ந்திருந்தார். வள்ளியம்மை சுவரில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்திருந்தார்.வேணுகோபால் முகம் முழுதும் தாடி வளர்ந்து அதை மழிக்க கூட தோன்றாது கட்டிலில் அருகே அமர்ந்திருந்தார். கட்டிலில் தேவகி கண்கள் மூடியவாறு படுத்திருந்தாள்.
நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அவள் சரிந்தபோது அனைவரும் அலறிவிட்டனர். ஏதோ விபரீதம் என பயந்து போனவர்கள், உடனேயே சிட்டியில் இருக்கும் நர்சிங்ஹோமுக்கு வந்து சேர்ந்து, ஒரு நாள் முழுக்க செக்கப்செய்து எந்த விதமான நோயும் இல்லை. மனசில் தான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பின் தான் அனைவருக்குமே சுவாசமே வந்தது.
வேணுகோபால் தான் இடிந்து போனார்.
மனைவியை ஒருநாளும் அப்படி படுத்தபடுக்கையாக பார்த்ததும் இல்லை. அவள் அப்படி இருந்ததும் இல்லை. ஒரு மருந்து மாத்திரை, சாப்பிட்டதும் இல்லை. இப்பொழுது அவளுக்கு புத்திரசோகம் ஒன்றைவிட, தேன்மொழியின் கடிதத்தில் இருந்த வார்த்தைகள் தான் அவளை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டிருந்தது.''என் புள்ளையின் எதிர்காலத்தை நினைத்து ஒரு பேதைப்பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கிட்டேனே. அவ எங்களை பார்த்து குற்றம் சாட்டியிருப்பாளா? இல்லை ஏதாவது எதிர் கேள்வி கேட்டிருப்பாளா? அவளோட பண்புக்கும், குணத்துக்கும் முன்னாடி நாம் எம்மாத்திரம்? பாவிகள் ஆயிட்டோமே.. கடவுள் என்னை மன்னிக்கவேமாட்டான்.. சுயநலக்காரி. நான் தெரிந்துகொண்டே பெண்ணாக இருந்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை பலிகொடுத்த பாவி நான்.." அவள் முகத்தில் அறைந்து கொண்டு புலம்ப, வீட்டிலுள்ளவர்கள் பயந்தார்கள். எங்கே மனநோயாளி ஆகி விடுவாளே? என்று அவளை சாமாதானம் செய்யும் விதமாக வேணுகோபால்,
''சரிம்மா நடந்ததை மறந்துடு..தேன்மொழியை தேடிக்கண்டுபிடித்து கூட்டிவருவது என் பொறுப்பு" என்றதும் அவளது புலம்பல் கொஞ்சம் குறைந்திருந்தது.