20
தேன்மொழிக்கு பிரமிப்பு நீங்கவில்லை அதிலிருந்து அவள் மீளவே கஷ்டபட்டாள் எனலாம். இந்த மாளிகையில் அவள் கால் தடம் பதிந்ததே இல்லை வெளியே நின்று பார்த்ததோடு சரி! அதிலும் தான் நுழைய காரணமான ஒரு சம்பவமே அந்த மாளிகையை மாற்றியமைப்பதற்கான திட்டத்துக்காகத்தான். தான் பார்த்து பார்த்து, ரசித்து, வரைந்து மாற்றியமைத்து வைத்த மாளிகைக்குள் தானே வாழவருவேன் என்று அவள் கனவிலும் நினைத்தாளில்லை.
ஹாலின் நடுவில் நின்றுகொண்டு புதுபட்டுப்புடவையும் கட்டிய தாலி நெஞ்சில் கம்பீரமாக விழுந்துகிடக்க அந்த மாளிகையை இரண்டாவது தடவையாக ரசித்தாள். எல்லாவற்றையும் விட அஸ்வந்தின் படங்களை இம்முறை மிக உரிமையோடு ரசித்தாள். அவனது குழந்தை பருவ படங்களை பார்த்தவளுக்கு கை தன்னிச்சையாக அவளது வயிற்றை மிருதுவாக தடவி விட்டுக்கொண்டது. முகம் செம்மை பூசியது.
அஸ்வந்த்தோ விட்டால் போதும் என்று கஸ்டப்பட்டு கட்டிக்கொண்டிருந்த வேஸ்டியை ஒரே உருவலில் உருவி விட்டு போய்க்குளித்தான். தேன்மொழி தோளில் கைபட திரும்பினாள் வள்ளியம்மையும் தேவகியும் நின்றிருந்தனர். தேவகிக்கோ தன் மருமகள் குணவதி, புத்திசாலி எல்லாவற்றையும் விட அழகு தேவதை மகனுக்கு பொருத்தமானவள் என்ற பெருமை பிடிபவில்லை. எங்கெங்கோ பிறந்த இருவருக்கும் ஆண்டவன் போட்ட முடிச்சு இதுதானா என யோசித்தாள்.
'என்னம்மா? புது இடம் புது வாழ்க்கையை நினைத்து பயம்மா இருக்கா?" தேவகி வாஞ்சையுடன் கேட்க
'புது இடத்தை நினைத்து பயம்மில்லை! புது வாழ்க்கையை நினைச்சுதான்." அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.
'என்ன பயம்? நாங்க இருக்கோம்..நல்லது கெட்டது சொல்லித்தர்றதுக்கு" வள்ளியம்மை அவள் தலையை வருடியவாறு கூறினார். தேன்மொழி விழிகள் உயர்த்தி அவரை பார்த்தாள்;. அந்த விழிகளில் பயம் தெரிய வள்ளியம்மை அவளது கைகளை எடுத்து
'இதபாரும்மா நீதான் இந்த வீட்டு எஜமானி! சகல பொறுப்புகளும் உன் கையில் தான். என்னை பாட்டி என்று கூப்பிடு! உன் பாட்டி உனக்கு எப்படியோ என்னவெல்லாம் செய்வாரோ அதேதான் இந்த பாட்டியும் செய்வேன். என் பேரன் இந்த ஊரில் பிறந்திருந்தாலும் உன்னைத்தான் அவனுக்கு கட்டிவைத்திருப்பேன். எனக்கு உன்னை ரொம்பவே புடிக்கும். உன் பொறுப்பான குணம், புத்திசாலித்தனம், எதற்கும் ஆசைப்படாத உன் மனசு, இப்படி அடுக்கிகிட்டே போவேன். நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததிலே எங்களுக்கு ரொம்ப சந்தோசம் தெரியுமா? எங்க குடும்ப மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் உன் கையில் தான். என் பேரன் கூட நீ ஒற்றுமையாக சந்தோசமாக வாழணும் . அதுதான் எங்களுக்கு நீ செய்யும் உபகாரம். அவன் மேலைநாட்டில் பிறந்தவன் இங்குள்ள எதுவும் தெரியாது..அவனை நல்வழிபடுத்துறது உன் பொறுப்பு.." என்றவாறு தன் நீண்ட பேச்சை முடித்தார்.
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)