எல்லையில் நின்ற பரமசிவமும், வேணுகோபாலும், வீராவும் தூரத்தில் புள்ளியாக ஒரு கார் தெரிய உற்சாகமானார்கள். வீரா கடகடவென்று ஆலமரத்தில் ஏறியவன்,
''அய்யா...நம்ம காருதானுங்க வந்துட்டிருக்கு.. சந்தேகமே இல்லை..நம்ம சின்னய்யா தான் ஓட்டி வர்றார்" அவன் மேலிருந்தவாறே நொடிக்கொரு தடவை தகவல் சொல்லியபடி இருந்தான்.
கார் நெருங்க வீரா தொப்பென்று குதித்தவனாக ஓடிப்போய் வழி மறித்தான்.
அஸ்வந்த் இவர்களை எதிர்பார்க்கவில்லை வண்டியை நிறுத்தினான். தீடிரென்று வண்டி நிறுத்தப்பட தேன்மொழி கண்விழித்து பார்த்தாள். மாமானரும் தாத்தாவும் நின்றிருந்தனர்.
''என்னப்பா? என்னாச்சு? எங்கே போயிட்டீங்க? எவ்வளவு துடிச்சுப்போயிட்டோம்" வேணுகோபால் காருக்குள் இருந்த அஸ்வந்திடம் குனிந்தவாறு கேட்டார்.
அதுவரை அமைதியாக இருந்த அவனது மனதும், பொறுமையும் அவர்களை கண்டதும் கோபமாக மாறியது.
''எங்கே போனா உங்களுக்கு என்ன? வழியை விடுங்க!" என அவன் சீறிவிட்டு வண்டியை ரிவர்ஸ் எடுத்து அவர்களது வண்டியை சுத்திக்கொண்டு போனான்.
மற்றவர்களும் கவலையாக பின் தொடர்ந்தனர்.
''தேவகி நாங்க வந்திட்டிருக்கோம்..அஸ்வந்த் கோபமாக இருக்கான்.. தேன்மொழிக்கு தலையில் கட்டுப்போட்டிருக்கு. இவ்வளவு தான் இப்போதைய தகவல் வைச்சுடுறேன்" என வேணுகோபால் சொல்லிவிட்டு செல்லை அணைத்தார்.''வேணு! பேரன் இன்னும் கோபமாகவே இருக்கான்டா..என்ன பண்ண போறோம்?" பரமசிவம் கவலை தேய்ந்த குரலில் வினாவினார்.
''அவரு கோபமாக இருக்கட்டும். அதுக்கு எல்லாம் பயப்படுறவன் நானில்லை! எது நடந்தாலும் நீங்க தலையிடக் கூடாது.. அவனை நான் அமெரிக்கா அனுப்புறதா இல்லை !" அவர் தீர்க்கமாக சொல்ல பரமசிவம் யோசித்தார்.
''இதே போல உன்னிடம் நான் நடந்திருந்தா, இப்போ இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது" அவர் கூற வேணுகோபால் தலைகுனிந்தார்.