பேரனும் பேத்தியும் சிரித்து பேசியவாறு நுழைவதை பார்த்த பரமசிவம் மீசையை முறுக்கியவாறு,
''ஏம்பா எப்போ போனீங்க? இப்போ மணி ஆறடிக்க போகுது.."
''அதுக்கு என்ன தாத்தா? வேணும் என்றால் வாட்சை மார்னிங் ஆறுக்கு திருப்பி விட்டுவிடவா? அவன் கேட்க தேன்மொழிக்கு சிரிப்பு வந்தது,
பெரியவர் முன்னிலையில் கஷ்டபட்டு அடக்கியவளாக, வாயைப்பொத்தியவாறு அவள் அடைக்கலம் கொடுத்த கிளி எப்படி இருக்கிறது என்று பார்க்க தோட்டத்துக்கு சென்றாள்.''ஏங்க உங்களுக்கு வேறு வேலை இல்லைன்னு சொல்லாம சொல்றீங்களா? மணி பார்ப்பது தான் வேலைன்னு நினைச்சுடப்போறான்.." சொல்லியவாறு தேநீர் தட்டை நீட்டினார் வள்ளியம்மை.
''போடி போக்கத்தவளே இவ்வளவு நேரமும் வெயிலில அலைஞ்சுட்டு வருதுங்களேன்னு கேட்டேன்.."
''தாத்தா! போக்கத்தவளே என்றால் என்ன?" பேரன் கேட்டதும்,
''என்னைவிட்டா வேறு நாதியில்லை என்று அர்த்தம்பா.."
''நாதி?" அவன் அடுத்த கேள்வியை கேட்க,
''இடம் இல்லை என்று அர்த்தம்.".
''போடி போககத்தவளே..ம்..இதை யாருக்கு சொல்லணும்..?"
''ம்..உன் ஹனிகிட்டே போய்ச்சொல்லு" அவர் வம்புடன் சொல்ல, வள்ளியம்மை அவசரமாக,
''ராசா! தப்புப்பா! அவகிட்டே சொல்லக்கூடாது! ஏங்க உங்களுக்கு வேற வேலை இல்லை?" கணவரை கண்டித்துவிட்டு பேரன் பக்கம் திரும்பி,
''அவகிட்டே என்னைக்கும் இந்த வார்த்தையை விளையாட்டுக்கு கூட சொல்லிடாதே!" அவர் சொல்ல,
''ஏன் பாட்டி?" புரியாமல் பார்த்தான்.
''ம்..உனக்கு அவளை அழவைத்து பார்க்க விருப்பம் என்றால்..அவ மனசை நோகடிக்க விருப்பம் என்றால் இந்த வார்த்தையை சொல்லு..." அவர் சொல்ல அஸ்வந்த் சட்டென்று,
''நெவர் பாட்டி..! நெவர்...ஹனியை அழவைக்குறதோ? அவளை நோகடிக்குறதோ? அது என்னால முடியாது..இந்த வார்த்தைக்கு அவ்வளவு பவர் இருக்கா..." என்றுவிட்டு மாடிப்படிகிளில் ஏறினான்.