அஸ்வந்த மாளிகைக்கு நுழைந்ததும் காலணிகளை உதறிவிட்டு சோபாவில் அமர்ந்தான். சுற்றிவர இருந்த பெரியவர்கள்,
'என்னப்பா ஊர் எப்படி?"
'ம் பாதி தான் பார்த்தது. அதுக்கே ஒரு நாள் போதலை! வெரி நைஸ் பிளேஸ்..எல்லாம் நேச்சுரல் அழகு...எல்லோரும் ஆக்டிவ்வா வேலை பார்க்குறாங்க. எனக்கு திரும்பி வரவே மனது இல்லை...அந்த ஆலமரத்தடியில படுத்து இருக்கலாம்னு தோணிச்சு...தாத்தா ஒரு ரிக்வெஸ்ட்.."
'என்ன ராசா? ஆர்ட போடு" என பாசத்துடன் பேரனை பார்த்தார்.
'வேலை செய்யுற லேடிசுங்களுக்கு பேபிஸ் இருக்கு. அவங்க மரத்துக்கு கீழே தூங்க வைச்சுட்டு, ஒரு சேவ்டியும் இல்லாம அவங்க ஒர்க்சை பார்க்குறாங்க..எனக்கு தாங்கலை..சோ ஒரு கிரஷ் போல ஐ மீன் காப்பகம் மாதிரி குடில்அமைச்சு, அதற்குள் பேபிசுக்கு தேவையான பொருட்கள், அவங்க விளையாடுவதற்கு ஏற்ற டாய்ஸ் பொருட்களுடன், அமைச்சு பார்த்துக்க ரெண்டு மூணு லேடிசுங்களை வேலைக்கு வைச்சா, வேலை பார்க்குற அம்மாக்களும் ரிலாக்சாக வேலை பார்க்கலாம். குழந்தைகளும் நல்ல மனநிலையில் வளரும். அதை பராமரிக்க போடும் ஆட்களுக்கும் வேலை தந்தது போலவும் இருக்கும் என்ன சொல்றீங்க?" அவன் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்க, அங்கு பலத்த கரகோசம் எழுந்தது வேலைக்காரர் மத்தியில்.
வீரா ஒடி வந்து,
'அய்யா நீங்க நல்லா இருக்கணும்.." என்றவாறு அவனது கைகளை எடுத்து கண்களில் ஒற்றினான். அந்த கைகளில் நீர் பட்டு ஈரமாக அஸ்வந்த் அவனது தோளைத்தட்டி கொடுத்தான்.
மற்றைய வேலைக்காரர்களும் அஸ்வந்தை கை தொட்டு பாராட்டவேண்டும் எழுந்த ஆவலை அடக்கினார்கள். காலம், காலமாக ஏழை மக்கள் அனுபவித்து வரும் ஒரு வேதனைக்கு ஒன்றுக்கு தீர்வு கிடைத்த சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
வேணுகோபாலும் மகனை நினைத்து பெருமையாக இருந்தது. அதே நேரம் தம்மை நினைத்து வெட்கமும் வந்தது. இந்த மண்ணில் பிறந்த எனக்கு என்றுமே இந்த கிராமத்து மக்கள் மீது அக்கறை வந்தது இல்லை. அந்நிய மண்ணில் பிறந்த தன் மகனுக்கு வந்ததை நினைத்து பூரித்துதான் போனார்.