''பேரா போயிட்டு ஒண்ணும் அவசரமில்லை சாவகாசமாக திரும்புங்க..அவசரமாக வண்டி ஓட்டிகிட்டு வந்து சேராமல்'' பரமசிவம் சொல்ல,
''தாத்தா ரெண்டு மணி நேர டிராவல், அப்புறம் இவங்க ஆசிரமத்துக்கு ஒரு முணு மணி நேரம் இருக்குமா? போயிட்டு அப்படியே ஒரே மிதியில திரும்பி வந்துடமாட்டோமா?" உற்சாகமாக அஸ்வந்த் சொன்னான்.
''போட்டேன்னா ஒண்ணு..அப்படி என்ன அவசரம் உனக்கு? பெரிவங்க நாங்க சொல்றோம்..இருட்டிய வேளையில் வரவேண்டாம்.! தங்கிட்டு நாளைக்கு காலையில வந்தா போதும். புரிஞ்சுதா?" வள்ளியம்மை அதட்டலுடன் சொல்ல, அஸ்வந்த் முறைப்புடன் பாட்டியை பார்த்தான்.
''தாத்தா உங்க ஒய்வ் வர வர வில்லி மாதிரி பிகேவ் பண்றாங்க. கண்டிச்சு வைங்க.." அவன் சொல்ல , அனைவரும் சிரித்தனர்.
''அஸ்வந்த்! பாட்டி சொல்வதிலும் நியாயம் இருக்குடா..எதுக்கு அவங்க பேச்சை தட்டணும்.நாமளும் சென்னைக்கு எத்தனை தடவை போயிருக்கோம்? ஆனா ஒரு தடவை கூட சுத்தி பார்த்தது கிடையாது . ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்" ரோஷன்
''கரக்டுடா..அங்குதானே நிறைய கேர்ள்ஸ்சுங்க..இருங்காங்க..அழகழகா சைட் அடிக்கவே நேரம் போதாது. ஜாலியா இருக்கும்." அஸ்வந்த் மனைவியை பார்த்தவாறு சொல்ல, அவள் முறைத்தாள். உதடு குவித்து
'உதைப்பேன்' என்றாள். அவன் சிரித்தான்.''அடப்பாவிங்ளா? இதுக்குத்தான் ரெண்டு பேரும் ஒத்தைக்கால்லே போறதுக்கு நிற்குறீங்களா?" கீதா செல்ல முறைப்புடன் அவர்களை கடிந்து கொள்ள,
''அய்யோ அம்மா நீங்க வேற கடுப்பேத்தாதீங்க..நாங்க நல்ல பிள்ளைங்களாக போயிட்டு வந்துடுறோம்.. நேரம் ஆகுது.. கிளம்பலாமா?" ரோஷன் கேட்க அஸ்வந்த் தலையாட்டியவாறு குழந்தையின் அருகில் வந்து அதற்கு ஒரு முத்தம் வைத்தவன், பெரியவர்கள் இருந்தாலும் மனைவியின் அருகில் வந்து, அவன் அவளது கன்னத்தில் முத்தம் இட அவளுக்கு வெட்கம் பூசிக்கொண்டது.
எல்லோரும் சிரிக்க , ரோஷனுக்கு நண்பனது முகமும், அவனது செயலும் அவன் வாழ்க்கை அவனுக்கு திரும்ப கிடைத்துவிட்டதை பறைசாற்ற சந்தோசப்பட்டான்.