தேன்மொழி குழந்தைக்கு பால் கொடுத்தவள், அது உறங்கிவிட, அஸ்வந்த் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
கண்களில் மனைவி பால் கொடுக்கும் காட்சி தெரிய, அவளது தாய்மையையும், அவளது கோலத்தையும் பார்த்து அவனுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடியது.தனது காதலையும், சந்தோசத்தையும் அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேகம் எழுந்தது.
காலடி ஓசை கேட்டு தேன்மொழி நிமிர்ந்தாள்.கணவன் தன்னையே பார்ப்பது தெரிய, அவளது முகம் மாறியது. குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தவள், கோபமாக அவன் பக்கம் திரும்பினாள்.
''கதவை தட்டிவிட்டு வரவேண்டும் என்று எண்ணம் இல்லையா?" என்றாள் பற்களை கடித்தவாறு. அவள் அப்படி கேட்டதும் அஸ்வந்த் பதட்டத்துடன்,
''ஹனி..நான் தப்பான எண்.." என தொடங்கியவனை தொடரவிடாமல் கைகளால் தடுத்து நிறுத்தியவளாக,
''எந்த நோக்கத்தோடும் என்னை நெருங்க வேண்டாம்! ஆசை வரும்போது தொட்டுப்பாக்க நான் ஒன்றும் பிராஸ்டிடியூட் இல்லை.." என்றதும், அஸ்வந்துக்கு எப்படி அப்படி ஒரு கோபம் எழுந்ததோ கை ஓங்கியவன் அதை மடக்கியவாறு அவளை வெறித்துப்பார்த்தான்.
''ஹனி..என்ன பேச்சு பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா?" குரலில் கோபம் எட்டிப்பார்க்க கேட்டான். அவளோ,
''எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்..கழுத்தில் கட்டியதை வைத்து பிளாக் மெயில் பண்ணி என்னை வலுக்கட்டாயமாக இழுத்துப்போவது போல, அதையே காட்டி பிளாக்மெயில் செய்து உங்க ஆசைக்கு பலவந்த படுத்தமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" வெறுப்புடன் கேட்க அவன் முகம் அதிர்ச்சியானது.
''கண்ட சாக்கடைகளை தொட்ட கை! எங்கேயோ எப்படியெல்லாம் இருந்தவர். என்னை நெருங்க கூடாது! நினைச்சுப் பார்க்கவே அருவருக்குது..ஆசையை தீர்த்துவைக்கும் அந்த தேன்மொழி இல்லை இந்த தேன்மொழி..என்னை தீண்ட உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது."அவள் சீறினாள். இவன் முகம் இறுகியது.