அதன் பின் வந்த நாட்களில் அவன் வெளியே எங்கும் போகாமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவனாக தீவிரமாகயோசித்தான். பெரியவர்களோ அவன் வழியிலேயே போய் அவன் வாழ்க்கை எது என்று புரிய வைக்குற முயற்சியில் தமது நாடகத்தில் முதல் கட்டத்திற்கான பதில் எப்படி வருது என்று பார்ப்பதற்கு காத்திருந்தனர்.ஜூலியானாவுடன் தொடர்பு கொண்டு தோல்வி கண்டவன் நண்பன் ரோசனை தொடர்பு கொண்டான். அவனிடம் விசயத்தை சொன்னபோது அவன் அறிந்த திட்டம் ஆதலால் அப்பொழுதான் முதற் தடவையாக கேட்பது போல ஆச்சர்யம், அதிர்ச்சி, என்று உணர்ச்சிகளை கொட்டி கேட்க வேண்டியதாய் இருந்தது.
'இத பாரு அஸ்! நம்பிக்கை இருக்கா? இல்லையா? என்பது முக்கியமில்லை அதை பத்திய ஆராய்ச்சியும் அவசியமற்றது...நாங்க அமெரிக்காவில இருந்தாலும் ஆபிரிக்காவில இருந்தாலும்...சில விசயங்களை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் ஏற்றுத்தான் ஆகணும்டா..
'.."
'பெரியவங்க எது சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும்..என்ன நஷ்டமாகிட போகுது ?"
'அதுக்காக நான் இங்கே... எப்படிடா மேரேஜ் பண்ணிக்க முடியும்?"
'அஸ் நீ அங்கே பண்றது மேரேஜ் என்று ஏன் நினைக்குறே? பெரியவங்க சொன்னாங்கல்லே என்ன பேரு ஒ.. பரிகாரமா? என்ன ரீமெடி போல... ஒரு திருஷ்டி கழிக்கிறது அவ்வளவு தான். அப்புறம் இந்தியாவில பண்ணதை இங்கே அமெரிக்கா வந்து சொல்லிகிட்டு அலைவியா? இல்லையில்லே? அவனவன் இந்தியாவில ஒரு கல்யாணம் இங்கு ஒண்ணு என்று ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்காங்க..இதெல்லாம் சகஜம் டேக் இட் ஈசியா.." நண்பனை வழிக்கு கொண்டு வருதற்காக தனக்கு கூட எப்படி எல்லாம் பேச வருது என்று நினைத்து ஆச்சர்யப்பட்டான்.
'ஓ காட் என்னால அப்படி நினைச்சு பார்க்கவே முடியல ரோஷ்..தப்புடா..."
'போடா மடையா! உன்னை யார் தப்பா நினைக்க சொன்னது? அவ உயிரை காப்பாத்துறதுக்கு நீ செய்யும் பெரிய ஹெல்ப் இது! இந்தியா போனது உன் வாழ்க்கை நல்லபடியா அமையணும் என்று அதற்கு உங்க குடும்ப குல தெய்வ கோவிலேலே நேர்த்தி தீர்க்கிறதுக்கு. அதே போல தான் இதுவும் ஒரு கடன்.. நல்லபடியா பெரியவங்க சொல்கேட்டு நடந்துக்கோ அவங்க உன் நல்வாழ்க்கைக்காகத்தான் சொல்வாங்க.. இந்தியா, இந்தியா தான் அமெரிக்கா, அமெரிக்கா தான் ரெண்டையும் போட்டு குழப்பிக்காதே" அவன் சொன்னதும் அஸ்வந்த் மனம் தெளிவு கண்டது.