சென்னை விமான நிலையம்.
வீரா நேரம் ஓடிக்கொண்டிருப்பதையும், வழி அனுப்ப சென்ற தேன்மொழி வராததால் உள்ளே தயங்கியவாறு நுழைந்தான்.
பார்வையால் அவளை தேடினான். எங்கும் அவள் உருவம் தென்பட்டதாக தெரியவில்லை. முதன் முதல் ஏர்போட்டுக்குள் தயங்கி தயங்கி அவன் நுழைந்ததும் பார்வையால் விழிப்பதையும், பார்த்த செக்யூரிட்டிகள் அவனருகே வந்தனர். அவர்களை பார்த்து தயங்கியவாறே,
''அய்யா...எங்க சின்னம்மாவை தேடுறேன்ங்க.. அவங்க வீட்டுக்காரரை வழியனுப்ப வந்தாங்க..ரொம்ப நேரமாச்சு அதான்" என்றான் அவர்களை பார்த்து.
என்ன? ஏது? என்று விபரம் கேட்டவர்களுக்கு அஸ்வந்த் செல்லும் நாடு, பிளைட் கிளம்பும் நேரத்தை சொன்னான். அது கிளம்பி ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகிவிட்டது என்று அவர்கள் சொன்னதும்,
''அப்போ எங்க சினனம்மா...எங்கேங்க..?" என அவர்களை பார்த்து பயந்தவாறு கேட்டான். அவர்களோ தோளைத்தட்டியவாறு,
''கவலைப்படாதே! அவங்க வெளியே உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.. போய்ப்பார்" என்றனர்.
வேகமாக கார் அருகே வந்து பார்த்தான். சுற்று முற்றும் பார்த்தான். அவள் உருவம் எங்கும் இல்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தது,
''அய்யோ அம்மா..எங்கேம்மா போயிட்டே...? பெரியய்யாவுக்கு என்ன பதில் சொல்வேன்..? நீ இடம் மாறி போயிருப்பியா? இல்லை..?" அவன் புலம்ப ஆட்டோக்காரர் ஒருத்தர் வந்து என்ன என்று விசாரித்தார்.
''அட..நீ இங்கு புலம்பிட்டு இருக்கே..உன் சின்னம்மா ஆட்டோ இல்லை, டாக்சி புடிச்சு வீட்டுக்கு போயிருக்கும் கவலைப்படாத..."
''நான் இங்கு இருப்பேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்களை விட்டுட்டு நான் போகமாட்டேன். அவங்க வீட்டு வேலைக்காரன் நான்.. அவங்களுக்கு இது எல்லாம் தெரியும்யா..அப்புறம் எப்படி?" அவன் அழுதான்.
''இதபார் நீ ஒண்ணு பண்ணு ! இந்தா என் செல்லு இதில உன் அய்யா வீட்டு நம்பருக்கு போன் போடு.! போட்டுக்கேளு அவங்க அங்கேதான் உனக்கு முன்னால போயிருப்பாங்க.."