தேன்மொழி தென்னந்ததோப்பில் தேங்காய் மட்டைகளை கணக்கு பார்த்து, உரித்த தேங்காய்களை வண்டியில் ஏற்றிவிட்டு தலை நிமிர்ந்த போது மணி நண்பகலாகியிருந்தது . களைத்துப்போய் அப்படியே வாய்க்கால் ஒடையில் அமர்ந்தாள். தோட்டக்காரன் வேலன் ஓடி வந்தவனாக,
'ஏம்புள்ள ஒரு இளநீரு வெட்டித்தரட்டா..?" கரிசனமாக கேட்க அவள் வேண்டாம் என தலையாட்டினாள். பம்பு செட்டில் நீர் பாய்ந்து கொண்டிருக்க அதை பருகினாள். இனாமாக எதையும் அவள் வாங்குவதில்லை என்ற குணம் தெரிந்தது தோட்டக்காரன் போசாமல் சென்றான்.
தேன்மொழி தென்னந்தோப்பு வேலை முடிந்ததும் எடுத்து வந்த மதிய உணவை உண்டுவிட்டு வயல், களத்து மேட்டுக்கணக்கை முடித்துவிட்டு பண்ணை வீட்டுக்கு கிளம்புவது என முடிவெடுத்தாள். வழிந்த வியர்வையை துடைத்துபடி நடந்தாள்.
எதிரே வயல் வேலைகள் முடித்து மதிய சாப்பாட்டிற்கு தூக்குச்சட்டியுடன் ஆலமரத்தடிக்கு போகும் தோழிகளை பார்த்தாள். இதர வேலைசெய்யும் பெண்களும் சாப்பிட போக , அவளும் கையை அசைத்து தானும் வருவதாக சைகை காட்டியவாறு விரைந்து அவர்களை அடைந்தாள்.
எல்லோரும் சாபபிடுவதை விடுத்து ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர்.
'என்ன சாப்பிடாம கதை அளந்துகிட்டு?" கேட்டவாறு உட்கார்ந்தாள்.
'ம் எல்லாம் நம்ம பெரியய்யா பேரனை பத்திதாண்டி" முந்திக்கொண்டு சொன்னாள் மேகலை.
'தொடங்கிட்டீங்களா?" கிண்டலாக கேட்டபடி அவள் தூக்குச்சட்டியை திறக்க முற்பட்டாள். கனகவல்லி அதை எடுத்து இழுத்து தன்பக்கம் வைத்தவளாய்,
'நாம எம்புட்டு அக்கறையா பேசிட்டு இருக்கோம் உனக்கு என்ன சாப்பாடு வேண்டிக்கிடக்கு?" அவள் சொல்ல, மற்றைய பெண்களும் ஆமாம் போட்டனர்.
'நீங்க வெட்டிப்பேச்சு பேசுறதுக்கு நான் ஏண்டி சாப்பிடாம இருக்கணும்?" தேன்மொழி முறைப்புடன் கேட்டாள்.
'வெட்டிப்பேச்சா? நீ கதை கதையா பட்டி மன்றம் வைக்கும் போது நாம கேக்குறது இல்லை!" பவளம்