''என்னடி ஆச்சு? எதுக்குடி இந்த கட்டு?" தோழிகள் அதிர்வுடன் கூவினார்கள்.
''ப்ச..படியில விழுந்துட்டேன்" என்றாள் மெல்லிய குரலில்.''என்ன விழுந்திட்டியா?" மேகலை பதட்டமானாள்.
''எப்படி?" செண்பகவல்லி
''இதென்னடி தெரியாதது மாதிரி கேட்குறீங்க..இவ தான் சாப்பிடாம விரதம் இருக்குறவளாச்சே அப்புறம் மயக்கம் போட்டு விழுந்திடாம என்ன பண்ணுவா?" என்றாள் பவளம் கோபத்துடன்.
''அடப்பாவமே..அப்படி என்னத்துக்குத்தான் விரதம் இருக்கியோ?" கனகவல்லி
''ம்..ஆசைப்பட்டது மாதிரி புருசன் அமைஞ்சுடுத்து! இனி என்ன அவரை போல ஒரு புள்ளை வேணுமுன்னு தான்" செண்பகவல்லி வம்புக்கு இழுக்க, தேன்மொழி விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.
''அட வெக்கத்தில உனக்கு சிரிப்பு கூட வருதாடி?'' மேகலை தேன்மொழியின கன்னத்தில் கிள்ளினாள்.
மன அமைதி தேடி வந்தவளுக்கு தோழிகளை கண்டதும் ஆறுதலாக இருந்தாலும் இவர்களது கேலியும் கிண்டலும் அவளது மன வலியை கூட்டுவதாகவே இருந்தது.
தனக்கு வாய்த்த வாழ்க்கையின் பின் இருக்கும் வரலாறு அறிந்தார்கள் என்றால் எப்படி துடித்துப்போய்விடுவார்கள்? கல்யாணம் செய்ய முதலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பயத்தை வைத்திருப்பது அவள் அறியாதது அல்ல. எந்த பயமோ? எதுவித கனவோ இல்லாமல் வாழ்கையை எதிர்கொண்ட தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என சொன்னால் அவர்கள் கலங்கித்தான் போவார்கள்.
அவர்களிடம் கொட்டி அழுதால் என்னவென்று தோன்றியது. கூடவே தன்னை நம்பி தன்னிடம் நம்பிக்கை வைத்து இனி இந்த குடும்ப கௌரவம் உன் கையில் என்று சொன்ன வள்ளியம்மை, பரமசிவம் முகம் சட்டென்று நினைவில் வந்து அவள் வாயை மூடவைத்தது.
இவர்களிடம் சொன்னால் ஊர் முழுதும் பரவி அப்புறம் இவ்வளவு காலமும் மரியாதையுடன் வாழ்ந்த குடும்பத்துக்கு ஒரு கேடு தன்னால் வரவிடுவதா? இதுதானா அவள் செய்யும் நன்றிக்கடன்?