''முதல் முதல்
உன்னை பார்த்து
நான் ஆச்சர்யப்பட்டது
என் கற்பனை
காதலனுக்கு
தேவதைகள்
உயிர் கொடுத்து
அனுப்பி இருக்கிறதோ
என்றுதான்.
உயிர் பெற்ற
காதலன்
எனக்காக
அமைத்துக்கொடுத்த
உலகம் தான்
இந்த காதல் மண்டலம்!"பெரியவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெண்கள் ஊரை சுற்றிப்பார்த்தனர். காணும் இடம் எல்லாம் பசுமையாகவும், தூய்மையாகவும் இருப்பதை பார்த்து அவர்களது மனது சந்தோசமாக இருந்தது.
அதை விட பரமசிவமும், அவரது சொத்துக்களும், அவருக்கு இருக்கும் பேரும், புகழையும், பார்த்து அவர் மேல் மதிப்பம் மரியாதையும் கூடியது.
சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர்களையே மதிக்க மாட்டார்கள். இங்கு பரைம்பரை, பரம்பரையாக பணக்கார வர்க்கத்து குடும்பம்.எவ்வளவு எளிமையாக, அன்பாக டீசன்டாக இருக்கிறது. அவர்களுக்கு மனது நிறைந்திருந்தது. தமக்கு இப்படி ஒரு கிராமத்தையும் அதன் மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்பு தந்ததுக்கு நன்றி சொன்னார்கள்.
அந்தக்கிராமத்தையும், தேன்மொழி வீட்டாரையும் பிரிய மனது இல்லாமல் அவர்கள் கிளம்ப தயரானார்கள். வெயில் தணிந்ததும் அஸ்வந்தும், ரோஷனும் கொண்டு போய் விட்டுவிட்டு வருவது என தீர்மானித்தார்கள்.
பெண்கள் குழந்தையுடன் தோட்டத்தில் கொஞ்சிக்கொண்டிருக்க, அவர்களது பொருட்களை ரோஷன் வண்டியில் ஏற்றினான். அஸ்வந்த் தேன்மொழியை பார்க்க சென்றான். அவனது முகத்தில் ஒரு முடிவு எடுத்ததற்கான தீவிரம் இருந்தது.
தேன்மொழி குழந்தையின் ஆடைகளை காயப்போட்டுவிட்டு காய்ந்தவகளை மடித்துக்கொண்டிருந்தாள். அஸ்வந்த் கதவை தட்டிவிட்டு, உள்ளே வந்தவன் அவள் எதிரே வந்து நின்றான்.
''ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு பேசாத ஒரு சூழ்நிலை இனி இல்லை. எல்லோரும் தோட்டத்திலே தானே இருக்கிறார்கள். இப்பவே ஒரு முடிவு எடுத்துவிட வேண்டியதுதான்." தேன்மொழி மனதுக்குள் சொல்லிக் கொண்டவளாக பேசத்தயராக, அவனோ முந்திக்கொண்டான்.