காரில் வந்து கொண்டிருந்த தேன்மொழிக்கு பெருத்த கேள்வி அஸ்வந்த் அமெரிக்கா போறேன் என்று சொன்னது தான். கணவனிடம் கேட்கலாமா என யோசித்தவள் , கார் ஓட்டும் அவனை பார்த்தாள்.
''ஏங்க நீங்க அமெரிக்காவுக்கு திரும்பி போகத்தான் போறீங்களா?" அவள் கேட்டதும் அஸ்வந்த் பார்வையை அவள் பக்கம் திருப்பி,
''யா.."
''பெ...பெரியவங்க சொன்னாங்க நீங்க இங்கே இருக்க போறதா.." அவள் கலவரத்துடன் கேட்டாள்.
''ஹேய். நான் இங்கு இருக்கவா வந்தேன்?" அவன் கிண்டலாக கேட்க, அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
''நீயும் என் கூட வா..உன் படிப்புக்கு நான் ஹெல்ப் பண்றேன்.." அவன் சொல்லவும் வீடு வந்தது.
அவள் எதுவும் பேசாது வண்டியை விட்டு இறங்கினாள. அஸ்வந்த் பாக்கெட்டில் இருந்த செல் அலற காரை நிறுத்திவிட்டு, அதை எடுத்தான். மறுமுனையில் ரோசன் குரல் கேட்க,
''ஹாய்" என உற்சாகமாக குரல் கொடுத்தான் இவன். உள்ளே நுழைந்து கொண்டிருந்த தேன்மொழியின் காதில் விழ திரும்பி பார்த்தாள்.
அஸ்வந்த் கார் சாவியை அவளை பிடிக்குமாறு சைகை செய்தவாறு அதை எறிந்தான். அவள் அதை பற்றியவளாக, அவனை பார்த்துவிட்டு போனாள். அவளுக்கு மனசே சரியில்லை. அமெரிக்கா, அமெரிக்கா என கணவன் ராகம் பாடுவதை பார்த்தால் அவளுக்கு பத்திக்கொண்டு வந்தது.
''இவர் திரும்பி போகமாட்டார், இங்கேயே செட்டிலாயிடுவார். என்று தானே என்கிட்டே சொன்னாங்க..அதுக்கு உடன்பட்டுத்தானே நானும் கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன்.."
''இல்லைன்னா மட்டும் மாட்டேன்னு சொல்லியிருப்பியாக்கும்" மனச்சாட்சி கிண்டலடிக்க,
''ச்சே..எதுக்கு அங்கே போறதிலியே குறியா இருக்காரு? வரட்டும் ! இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுட வேண்டியதுதான்";அவள் மனக் கொந்தளிப்புடன் தத்தளித்தாள்.
''என்னம்மா ஒரு மாதியா இருக்கே?" தேவகி எதிரே மௌனமாக தனக்குள் பேசியபடி வந்த மருமகளை பார்த்து கேட்டாள்.