இந்தியா,
''ஆயாம்மா இப்படி குளிப்பாட்டு..இந்தா இப்படி.." மீனா ஒரு பக்கம் சொல்ல,
''இங்கே பாருங்க விரல்களை சப்பிகிட்டு தாகமாக இருக்கோ?" கல்பனா தன் பங்குக்கு சொல்ல,
''ஆயாம்மா டவல் இங்கே நான் வைச்சிருக்கேன் இங்கே என்கிட்டே தா!" லலிதா சொல்ல,
''அடடா..முதல்லே ஒழுங்கா குழந்தையை குளிப்பாட்ட விடுங்கடி.." ஆயா செல்லக்கோபத்துடன் சொன்னார்.
அங்கு நடக்கும் கூத்துக்களை பார்த்து ரசித்துக்கொணடிருந்தாள் தேன்மொழி. அவளின் மழலையை ஆயா உட்பட, தோழிகள் அனைவரும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். தேன்மொழிக்கு பிரமிப்பாக இருந்தது. பிரசவ அறைக்குள் நுழையும் போது கோமதியிடம் ஒரு கடிதம் நீட்டினாள்.
''எனக்கு ஏதும் நேர்ந்தா மட்டும் தான் இந்தக்கவரை திறந்து பார்க்கணும். என் மேல சத்தியம்" என்று ஒரு கவரை கோமதியிடம் தந்துவிட்டுத்தான் பிரசவ அறைக்குள்ளே போனாள்.
பெண்கள் அத்தனை பேரும் தைரியம் சொல்ல, பிரசவ அறைக்குள் ஆயாமட்டும் போவேன் என்று அடம் பிடித்து வந்து நின்று, அவளுக்கு ஒவ்வொன்றையும் சொல்லி கண் இமைக்கும் நேரத்தில் சுகப்பிரசவமாக வைத்தார்.
ஆயா இல்லை என்றால் தேன்மொழி பயந்தே போயிருப்பாள். பிறந்ததிலிருந்து குளிப்பாட்டுவது வரை எல்லாம் செய்தார்கள்.
இந்த இல்லத்தை பார்த்தபின் அவளுக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று நினைத்திருந்தாள். கணவனை உரித்துவைத்தது போல பிறந்திருந்தான் மகன் அஸ்வத். ஒவ்வொரு அங்கங்களும் அஸ்வந்தையே அவளுக்கு நினைவுபடுத்தின. அவன் பிறந்தபின்பு தான் தேன்மொழிக்கு வாழ்க்கையே முழுமை அடைந்ததாக உணர்ந்தாள்.
''ஹேய் தேனு..என்ன முழிச்சுட்டே கனவா?" சாந்தி அதட்ட நினைவுக்கு வந்தவளாக,
''ம்ஹூம்.."
''குட்டிப்பயல் குளிச்சாச்சு! பட் அவரை பாரு ரொம்ப பசிபோல கைவிரல் முழுதும் வாயுக்குள்..." கல்பனா சொல்லியவாறு தேன்மொழியிடம் தந்தாள்.