சோலையம்மா மண்வீட்டு முன்னால் வந்து நின்ற காரை பார்த்ததும் ஓடி வந்தார். அதிலிருந்து இறங்கிய வேணு வேணுகோபாலையும் பரமசிவத்தையும் ஒரு சேர பார்த்ததும்,
'மாரியாத்தா..இது என்ன என் வீடு தேடி தெய்வங்கள் வந்திருக்கு?" தள்ளாத வயதிலும் ஓடிப்போய் எதிர்கொண்டார்.
'சோலையம்மா எதுக்கு பதட்டப்படுறே? முதல்லே உட்காரு" திண்ணையில் அவரை அமர வைத்து தானும் அமர்ந்தார் பரமசிவம். சோலையம்மா பதற,
'அய்யா நீங்க போய் வெறும் தரையில". அவர் பதட்டத்துடனேயே கேட்க,
'இருக்கட்டும் சோலையம்மா..என்னப்பத்தி தான் உனக்கு தெரியுமே, எதுக்கு இந்த பெரிய உபசாரம் எல்லாம்? இது யாருன்னு தெரியுமா?" பக்கத்தில் நின்ற வேணுகோபாலை சுட்டிக்காட்டி கேட்டார்.
'தெரியுதுங்கய்யா நம்ம சின்னய்யா..உங்க முகம் அப்படியே இருக்கு மறக்குமா?" அவர் சிரிப்புடன் வேணுகோபாலை சிறுவயதில் இருந்து பார்த்தே பழகியவராகையால் சொல்ல,
'ம் இவனோட புள்ளை.. அதான் என் பேரன் அவனை பாத்து இருக்கியா?" பரமசிவம் கேட்க,
'பார்த்திருக்கேன்யா..தென்னந்தோப்பில"
'எப்படி இருக்கான்?"
'அவருக்கு என்னங்கய்யா? சீமத்துரை... வெள்ளைக்கார துரைதான். எம்புட்டு அழகு? செக்கச்செவந்த நிறம் ராஜ குமாரனாட்டம் இருக்காரு. ஊர் பொண்ணுங்க எல்லோரும் அவரைப்பத்திதானே பேசுறாங்க.." அவர் சொல்ல, பரமசிவம் பெருமிதமாய் மீசையை முறுக்கியவராய்,
'ம் அந்த ராஜ குமாரனுக்காக உன்கிட்டே ஒண்ணு கேட்க வந்திருக்கேன். தருவதும் தராததும் உன் இஷ்டம்"
'என்கிட்டேயா? என்னய்யா வேணும்? உங்களுக்கு இல்லாதா? என் வீடு தேடி வந்து தெய்வம் என்கிட்டே என்ன இருக்குன்னு வந்திருக்கு?" அவர் கண்கலங்க கேட்க,
'உன் பேத்தி! உன் பேத்தியை என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பாயா?" அவர் கேட்டதும் தான் தாமதம் சோலையம்மா வாயடைத்துப்போனவராக, பரமசிவத்தின் பாதங்களில் விழுந்தார். அவர் பதறிப் போனவராக தூக்கி நிறுத்தியவர்.