ஊர் மக்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். தேன்மொழி பக்கத்தில் கனகவல்லி அழுது அழுது வீங்கிய முகத்துடன் இருந்தாள்.
அவளது சகோதரி பூவல்லியும், பெற்றவர்களும் அழுத முகத்துடன் இருக்க, அவளது கணவன்; வேலப்பன் வீறாப்பாக நின்றிருந்தான். தேன்மொழியை அங்கு கண்ட அஸ்வந்த்,
''என்னிடம் சொல்லாமல் இங்கு தான் நீ வந்திருக்கிறாயா?" என்பது போல பார்வையை எறிந்தான்.
அஸ்வந்தை கண்ட தேன்மொழியோ மனதுக்குள் சந்தோசம் வந்தது. இந்த பஞ்சாயத்துக்கு அவனால் நல்ல முடிவு சொல்ல முடியும் என்று. தோழியின் வாழ்க்கையை பலியாக்க விரும்பவில்லை என்று அவளது முகத்தை வைத்தே அவனும் கண்டறிந்தான்.
பவளமும், செண்பகவல்லியும், கனகவல்லியை தேற்றியவாறு இருந்தனர். மேகலை பூவல்லியின் மூன்று பெண் குழந்தைகளையும் தன்னிடத்தில் வைந்திருந்தாள்.
கைக்குழந்தையை வைத்திருந்த பூவல்லி வழியும் நீரை துடைக்க கூட தோன்றாது நின்றாள். பஞ்சயாத்து மேடையில் பரமசிவம் அமர்ந்ததும் சலசலத்த கூட்டம் அமைதி கொண்டது.
''நாச்சியப்பா என்ன சொல்றாங்க ரெண்டு தரப்பும்?" பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான நாச்சியப்பனை பரமசிவம் கேட்டவாறு சம்பந்தப்பட்டவர்களை பார்த்தார்.
அவர் அருகில் அமர்ந்திருந்த அஸ்வந்த் என்ன நடக்குது என்று முதலில் வேடிக்கை பார்ப்பது என முடிவு எடுத்தவனாக காத்திருந்தான்.
''என்னத்தைய்யா சொல்றாங்க..? வேலப்பன் தனக்கு ஆம்பிளைப்புள்ளை வேணும் என்று ஒத்தைக்கால்லே நிற்குறான். பொறந்தது நாலாவது கூட பொண்ணா போச்சாம்.. அவனால தாங்க முடியலை...அவன் பெஞ்சாதி பூவல்லி புருசனை விட்டுத்தரமாட்டேங்கிறாள்... சின்னவ கனகவல்லி மாமனை கட்டிக்கமாட்டேன்னு சொல்லுது... பொண்ணுங்களை பெத்தவங்க யார் வாழ்க்கை பாழாகப்போகுதோன்னு புரியாம பஞ்சாயத்து கூடியிருக்காங்க..." நாச்சியப்பன் சுருக்கமாக சொல்ல,
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)