அஸ்வந்தின் மனம் நிறைந்திருந்தது ரொம்பவும் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தான். பூஜை செய்த மகிமையா ? எதுவென்று தெரியவில்லை. கோவிலில் இருந்து வந்து பெரியவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
தேன்மொழி சாதாரண புடவைக்கு மாறியவளாக முதல் வேலையாக கணவனுக்கு பொங்கலும், பழங்களும், தட்டில் எடுத்து வைத்து அவனை தேடிப்போனாள். தன்னால் அவனும் பட்டினியாக இருக்கிறான் என்றதும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
''எப்படியாவது இதை உண்ண வைத்துவிட வேண்டும்" என தீர்மானித்தவளாக மாடிக்கு விரைந்தாள்.
அஸ்வந்த் ஜுலியானாவிடம் இருந்து எந்த மெசேஜ்ஜும் இல்லை என்றதும் மறுபடியும் மெசேஜ் அனுப்பினான் .
''ஜுலி உன் செல்லை சரி பார் ! உன்கிட்டே நிறைய்ய பேசணும்..சீக்கிரம் தொடர்பு கொள்" என்றுவிட்டு பால்கனி வழியே வெளியே இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தான்.
மனம் ஜுலியானாவிடமிருந்து பின்னால் கொலுசு சத்தம் கேட்க நடந்து வந்து கொண்டிருந்த தேன்மொழியிடம் தாவியது. சாதாரண புடவையைக் கூட அவள் கட்டியிருந்த நேர்த்தி அவனை வெகுவாக கவர்ந்தது. தாய் தேவகி தொழில் முறைகளாலும், அமெரிக்க குளிராலும் ஆரம்பத்தில் இருந்தே அவள் புடவையே தொட்டதில்லை.
''எத்தனை வரைட்டியான காஸ்டியும்? எப்படி முடியுது இந்த பெண்ணால் நினைத்த போது மாத்தி, மாத்தி வெயாரிங் பண்ண?" அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, தேன்மொழி அவனை நெருங்கிவிட்டிருந்தாள்.
''இந்தாங்க" அவனிடம் தட்டை நீட்டினாள் அவன் புரியாமல் பார்க்க,
''உங்களுக்குத்தான்! சாப்புடுங்க!" அவள் நீட்டிய தட்டில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அதை சுற்றி வர பழங்கள் அளவாக வெட்டியபடி மெதுவடையுடன் அலங்கரித்து இருக்க, உணவு தட்டை கூட அவள் அலங்கரித்த விதத்தை ரசித்தவன்,
''ம்ஹூம் நான் விரதம் இருக்கேன்...ஹனி" என்றான் அவன் உறுதியான குரலில்.