அஸ்வந்த் காருக்கு வந்தவன் அதை புயல் வேகத்தில் கிளப்பிக்கொண்டு பறந்தான்.
''எனக்கு வேணும்.. பேசாம ஜுலியை லவ் பண்ணிகிட்டே லைவ்வை தொடங்காம, மம்மிகிட்டே மேரேஜ் சம்மதம்.. அது.. இது என்று யோசிச்சேன் பாரு எனக்கு வேணும்..இந்த பெரியவர்கள் என்னை முட்டாளாக்கி ச்சே..இருங்க வர்றேன்.." அவன் தீவிரமாக யோசித்தவாறு வீடு வந்து சேர்ந்தான்.
அவன் மட்டும் தனியே வர பெரியவர்கள் பதட்டத்துடன் ஓடி வந்தவர்களாக,
''அஸ்வந்த் தேன்மொழி எங்கே?" தேவகி பயத்துடன் வினாவினாள்.
''ம்.அவளுக்கு அழணுமாம் அழுதுகிட்டு இருக்கா!" என அவன் அதற்கு மேல் எதுவும் பேசாது மாடிப்படிகளில் ஏறப்போனான்.
பெரியவர்கள் கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அவனிடம் ,
''அவ மான, ரோசம் உள்ளவ. ஏதாவது பண்ணிடப்போறா..அதுவும் மலை உச்சி வேறு. தனியா விட்டுட்டு நீ எப்படி வரலாம்?" பரமசிவம் கேட்க, ஏறிக்கொண்டிருந்தவன் காதில் விழ விடுவிடுவென்று இறங்கி வந்தவன், ஆவேசமாக தாத்தாவை பார்த்து,''ஏதாவது பண்ணிக்கட்டும் ! அவ அங்கு சாகட்டும்! நான் இங்கு சாகுறேன்.." அவன் சொல்லிவிட்டு மாடிக்கு வந்து கதவை படாரென்று அடித்து சாத்திவிட்டு தன் மெத்தையில் தொப்பென்று விழுந்தான்.
''ஏங்க நாமாவது போய் அவளை அழைச்சுட்டு வரலாம் ஏதும் விபரீதம் ஆகமுதல்" தேவகி பதட்டத்துடன் சொல்ல,
''இரும்மா! அந்தப்பொண்ணு அப்படி ஒண்ணும் எங்க குடும்ப மானத்தை மலை உச்சியில் பறக்க விடமாட்டா.! உன் புள்ளை என்ன பண்றான்னு பார்ப்போம்.." வள்ளியம்மை சொல்ல, உள்ளே அஸ்வந்த் கோபம் தணிந்து போக, அமைதியான மூளை தேன்மொழியை பற்றி தாத்தா சொன்னதை எடுத்து உரைத்தது.
''அவர் சொல்வது போல ஏதாவது பண்ணிவிடுவாளோ? நான் நிற்கும் போதே செய்யத்துணிந்தவ. இப்போ..ஓ காட்.." இதயத்துக்குள் குளிர் பரவ, அவன் துள்ளி எழுந்தவனாக கதவை புயல் வேகத்தில் திறந்து கொண்டு மாடிப்படிகளில் குதிக்காத குறையாக குதித்து, காரை எடுத்துக்கொண்டு பறந்தான்.