தேன்மொழி நர்சிங்ஹோமுக்கு வந்திருந்தாள். ஸ்கேனிங் எடுப்பதற்காக. வயிறு லேசாக தெரிய ஆரம்பித்திருந்தது. வாந்தியும், மயக்கமும் அவளை பாடாய்ப்படுத்தி எடுத்தன.
இல்லத்தில் ஆயாவிலிருந்து அனைவரும் பக்குவமாக கவனித்துக்கொண்டனர். வெயிட்டிங் ரூமிலில் அமர்ந்திருந்தாள். கூட வந்த லலிதா குடிப்பதற்காக ஏதாவது வாங்கி வருகிறேன் என சென்று இருந்தாள்.
தேன்மொழி அந்த வெயிட்டிங் ஹாலை ஒரு நோட்டம் விட்டாள். பாதிக்கு மேல் எல்லோரும் கர்ப்பிணிப்பெண்கள் தான். வயிறு சிறுத்து, பெருத்து என இருந்தனர். இவள் ஒருத்தி மட்டும் கணவன் இல்லாமல் வந்திருந்தாள். பக்கத்து சீட் பெண் வாந்தி எடுக்க, அவள் கணவன் ஏந்தியதும், அவளை தாங்கியதும், தேன்மொழிக்கு ஏக்கத்தையே கொடுத்தது.
''என் கணவன் இருந்திருந்தால் இதைவிட தாங்கு, தாங்கு என்று தாங்குவானே. அறுந்த செருப்பையே தன்கையால் எடுத்து எனது பாதம் வலிக்காமல் பார்த்தவன், இப்போது தவிக்கவிட்டு தனிமரமாக்கிவிட்டு போனதுதான் விதியோ?'
'எனக்கு ஏன் இந்த கொடுமை? வயிற்றில் இருக்கும் கருவை சுமந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் அஸ்வா உங்க நினைவாகவே வருதே..! உங்க கூடவே இருக்கணும் என தோன்றுதே...! கடவுளே எப்படி பிரசவத்தை எதிர்கொள்ள போகிறேன்?
''எனக்கு ஏதும் நேர்ந்தால், என் குழந்தையின் கதி? உங்களை மறுபடியும் பார்க்கமாட்டேனா? அஸ்வா நீங்க வந்துடமாட்டீங்களா? ஹனி நீதான் வேணும் என்று வரமாட்டீங்களா? இந்த அபலைப்பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா? எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கே...'
'இன்னொருத்தி கூட நீங்க குடும்பம் நடத்த. நான்..நான்...உங்க உயிரை சுமந்து கொண்டு தினமும் சாகுறேனே..என் மனவேதனையை யாருக்கு சொல்லி அழ..?
''என் இதயம் அலறுதே அஸ்வா..! என் அடிவயிறு கதறுதே அஸ்வா...! ஒவ்வொருத்தரையும் அவங்க அவங்க துணையோடு பார்க்க, பார்க்க எனக்கு கோபம் வருதே...! எல்லாம் உங்களால் தானே..! உங்க சுயநலம்..! உங்க வாழ்க்கை! உங்க ஜுலி..! உங்க ஆசையை தீர்த்துகிட்டு என்னை நடைப்பிணமாக்கிவிட்டு போயிட்டீங்களே...!" அவள் மனம் ஏக்கத்தில் தொடங்கி இறுதியில் அவன் மேல் சொல்லெணா கோபத்தில் முடித்தது.