2
தமிழ்நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பான அந்த கிராமத்தில் பரம்பரை பணக்காரர் பரமசிவத்துக்கும், வள்ளியம்மைக்கும் செல்வ புதல்வனாக பிறந்தவர் வேணுகோபால்.
லட்சுமி தேவி மட்டுமல்லாது சரஸ்வதி தேவியும் அவரை நன்றாகவே ஆசீர்வதித்திருந்தாள். தமிழ்நாட்டில் முதல் மாணவனாக வந்தார். கல்லூரியில் சேரும் வரை அவருக்கு தெரிந்தது எல்லாம் அவரது கிராமம், வயல்கள், வரப்புகள், தென்னந்தோப்பு, மாமரங்கள், கோவில் திருவிழாக்களும் தான்.
பிளஸ்டு முடித்து விட்டு மேற்படிப்புக்கு சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கியிருந்த போது தான் நவீன உலகம் ஒன்று இருப்பதையே அறிந்தார். அந்த உலகம் அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் நவநாகரீக ஆடைகளுடனும், கூச்சமோ தயக்கமோ இல்லாமல் ஆண் பெண் என ஒன்றாக பழகும் விதம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கிராமத்தில் வயதுக்கு வந்தவுடன் பெண்கள், ஆண்கள் முன் எதிரே நின்றதையோ அவர்கள் முகம் கண்டதையோ அறியாதவர். கதவுகளுக்கு பின்னால் இருந்து வரும் அவர்களது குரல் கேட்டறிந்தவர். இங்கே அருகருகே அமர்ந்து ஒன்றாக டீ சாப்பிடுவதும், ஒரே பைக்கில் போவதும் கிராமத்திலிருந்து வந்தவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.
கிராமத்து மக்கள் தமக்கென்ற ஒரு உலகத்தை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்து வரும் அவர்களின் வாழ்க்கையை எண்ணி பார்த்து பரிதாபம் கொண்டார். தானும் கிராமத்துக்காரன் என்பதை நினைத்து வெறுப்பு வந்தது. அந்த கிராமத்திலிருந்துதான் வருகிறேன் என்பதை சொல்வது அவருக்கு பிடிக்காமல் போனது.
கல்லூரியில் படிப்பில் முதலிடம் வகித்து எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அதில் ஒருத்தியாகிப் போனவள் தான் தேவகி. மும்பையில் பிறந்து தந்தையின் , தாயின் விவாகரத்தில் அவள் அங்கும் இங்கும் பந்தாடப்பட, பொறுக்க முடியாமல் தோழியின் உதவியோடு சென்னைக்கு வந்து படிப்பை தொடர்ந்தாள்.
