அஸ்வந்தின் கட்டுப்பிரிக்கப்பட்டு தொடர்ந்து வந்த நாட்களில் ஆயில் மசாஜ் செய்ததில் அவன் குணமடைந்து விட்டான். திருவிழா நெருங்கியது. தேன்மொழி விரதம் இருப்பது இல்லை என முடிவு எடுத்திருந்தாள். பத்து நாளும் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. அஸ்வந்துக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. கற்சிலைக்கு இப்படி ஒரு விழாவா? என எண்ணி வியந்தவண்ணம் எல்லாவற்றையும் வியப்போடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்து நிறைந்த மக்களை காண அவனுக்கு மேலும் அதிசயமாக இருந்தது. அதை விட பத்து நாளும் ஊருக்கு அன்னதானம் வழங்க பரமசிவம் குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது. அவருக்கு இருக்கும் புகழையும் செல்வாக்கையும் நேரில் கண்டவனுக்கு மேலும், மேலும் ஆச்சர்யமே தாக்கியது. பட்டு வேட்டி தான் கட்ட வேண்டும் என்று வீட்டில் வலியுறுத்த அவன் தாத்தவின் காலில் சட்டென்று விழுந்தவனாக,
''தாத்தா..எதை வேணா கட்டச்சொல்லுங்க இந்த காஸ்டியூம் வேண்டாம்.." என அவன் கெஞ்சிக்கேட்டுக்கொள்ள,
''பேண்டின் மேல் தான் சுற்றிக்கட்டிவிடுகிறேன்" என்று அவர் வலியுறுத்தவும் அரை மனதாக ஒத்துக்கொண்டான்.
''உன் நிறத்துக்கு இந்த பட்டு வேட்டி இன்னும் சோக்கா இருக்குப்பா.. வள்ளியம்மை சொல்லியவாறு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.
வீடு முழுதும் ஒரே புனிதமாக இருக்க அவனுக்கு மனது நிறைந்திருந்தது அவனால் மாமிசத்தை நினைத்துப்பாக்கவே மனது வெறுத்தது எனலாம். வீட்டில் இருப்பவர்களிலிருந்து ஊர் வரை விரதம் இருப்பதை பார்த்தவனுக்கு என்னவோ போல் இருந்தது. தேன்மொழியிடம் வந்தான்
''ஹனி..இப்படி ஊரே விரதம் இருக்குமா?" குத்துவிளக்குகளை சரி பார்த்துக்கண்டிருந்தவளை பார்த்து கேட்டான்.
''ஆமாங்க..சக்தி வாய்ந்த அம்மனுங்க, நாம எது நினைச்சு வேண்டிகிட்டாலும் நடக்கும்..முன்னாடியே சொல்லியிருக்கேன்லே...ரொம்ப தூரத்திலிருந்து ஏன் பட்டணத்திலிருந்து கூட வருவாங்க, பரிகார பூஜை , விரதம் என்று வழிபட.." அவள் சொல்ல