''மலைச்சாமியே..இது என்ன சோதனை? என்னைக்கும் இல்லாம இன்னைக்குன்னு விளக்கு அணைஞ்சுகிட்டே இருக்கு...மனசு படபடங்குது.." மலைக்கோவிலில் விளக்கேற்றியவாறு இருந்த தேன்மொழி விளக்கு அது நான்கு தடவையாக அணைந்து போக மறுபடியும் ஏற்றியவளாக கண் மூடி பிரார்த்தித்தாள்.
''கடவுளே..! எனக்கு நல்ல கணவனை கொடுத்த நீ..! சந்தோசமான வாழ்க்கையையும் கொடுத்திருக்கே! இப்போ வேண்டுவது எல்லாம் ஒன்று தான்..எனக்கு ஒரு குழந்தை வேண்டும். அது பிறந்ததும் உன் படிக்கட்டுகளில் முழங்காலால் நடந்தே வந்து விளக்கு ஏத்துறேன்..! கருணை காட்டு..!" அவள் பிரார்த்தனை முடிந்து கண் திறக்க விளக்கு அணைந்து போயிருந்தது. அவள் முகம் கலவரமானது.
''என்னென்னு தெரியலையே? யாரை தண்டிக்க போறே? எது என்றாலும் எனக்கு கொடுத்திடு.!" அவள் தத்தளித்த மனதுடன் ஸ்லோகம் சொல்லியவாறு இருந்தாள்.
படிகளில் ஏறி வந்த அஸ்வந்த் வேர்வையை துடைக்க கூட தோன்றாது தேன்மொழியை பார்த்தான். எவ்வளவு வீராப்பாக ஆவேசமாக பெரியவர்களுடன் வாதாடினானோ? எவ்வளவு வேகமாக அவளை பார்த்து பேச ஓடி வந்தானோ? அத்தனையும் அவளைக் கண்டதும் அவனது நாக்கு பேச எழ வில்லை. எப்படி பேசுவது? எங்கு தொடங்குவது? எதை சொல்வது?"" எதுவும் அவனுக்கு எட்டவில்லை.வணங்கிவிட்டு எழுந்த தேன்மொழி திரும்பினாள். கணவன் வேர்வை வழிய நிற்பதை பார்த்தவள் அவனருகில் ஓடி வந்து,
''என்னங்க..இப்படியா வேர்வை சொட்ட ஓடிவருவீங்க?" கேட்டவாறு முந்தானையால் அவனது முகத்தை துடைத்துவிட அஸ்வந்த் எச்சில் விழுங்கினான்.
''ஹ...னி..."
''என்னங்க?" அவள் கனிவுடன் கேட்க அவளது குரலில் இருந்த நெகிழ்வு இவனது வாயை அடைத்தது.
.''....."
''நீங்க தூங்கிட்டு இருந்தீங்க..! எழுப்பி சொல்லாம வந்துட்டேன்..! நீங்க எழுந்திரிக்குறதுக்கு முன்னாடி வந்துடலாம் என்று நினைச்சேன்..ஆனா இன்னிக்குன்னு பார்த்து இந்தப்பக்கம் ஒரே காத்து! விளக்கு அணைஞ்சுகிட்டு இருக்கு..மனசு சரியில்லை! அதான் கொஞ்ச நேரம் நின்னுட்டேன்.." அவள் விளக்கம் கொடுத்தவாறு அவனை பார்த்தாள். அவன் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் நின்றிருந்தான்.