நினைவலைகளிலிருந்து மீண்டபோது ஸ்நோ கொட்டி முடிந்திருந்தது. மனைவி காலை டிபனை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
'எப்போது இப்படி அவள் செய்து இருக்கிறாள்? அவளை செய்ய நான் விட்டிருக்கிறேனா? அறக்கபறக்க நானும் கிளம்பி அவளையும் அடித்துவிரட்டாத குறையாக இழுத்துக்கொண்டு ஓடிய நாட்கள் எத்தனை? எத்தனை? சாவகாசமாக அமர்ந்து கதை பேசி ஒன்றாக சாப்பிட்டு அப்படி ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா என்ன? ஏன்தான் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து தொலைத்தோமோ?" வேணுகோபாலின் மனம் மீண்டும் சலிப்புடன் தாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வெறுப்படைந்தது.
'என்னங்க...டிபன் சாப்பிடக் கூப்பிட்டா என்னையே உத்து பாக்குறீங்க?"
'அனுபவிக்க வேண்டி வயசில் எதையும் அனுபவிக்கலை..எத்தனையை இழந்துட்டேன்? உன் கூட ஒண்ணா உக்கார்ந்து சாப்பிட்டிருக்கேனா? இல்லை ஜோடியாக ஊர் சுற்றத்தான் உன்னை கூட்டிப்போயிருக்கேனா? உனக்கு என்ன பிடிக்கும்? எது பிடிக்காது என்று பார்த்து நடந்திருக்கேனா? என்னை கல்யாணம் பண்ணி நீ என்னத்தே கண்டே? நானும் ஒடி உன்னையும் ஓடவைத்து...ச்சே.."
'என்ன பழையபடி ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போ எதுக்கு அது எல்லாம்? அப்படி நீங்க உழைக்காம இருந்திருந்தா? நாம இங்கே வாழ்ந்திருக்க முடியுமா? நம்ம பையனை விரும்பிய துறைகளில் ஈசியாக சேர்க்க முடிந்திருக்குமா? அவனது படிப்பு செலவு..தொழில் உதவி என்று கணக்கு போட்டு பார்த்தா...இந்திய ரூபாயில் கண்ணை கட்டும்...நமக்கென்று எத்தனை கம்பெனி..நமக்கென்று பங்களா, கார்..நம்ம புள்ளைக்கு கம்பெனி...கார் எல்லாம் நீங்க சம்பாதித்ததுங்க...எத்தனை இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கீங்க...?
'.......'
'இருபத்தியெட்டு வருசத்துக்கு முன் நாம எந்த கம்பெனி சார்பாக வந்து சேர்ந்தோமோ அந்த கம்பெனியே நம்மகிட்டே கை கட்டி நிற்கும் நிலை யார் கொண்டு வந்தது? இங்கே உங்க புகழ் எப்படி பரவியிருக்கு? உங்களை இங்கு எவ்ளோ மதிப்போடும் மரியாதையோடும் பார்க்குறாங்க...? நம்ம நாட்டுக்கு பெருமை தேடித்தந்த முதல் இந்தியன்ங்க நீங்க? எத்தனை பேர் உங்ககிட்டே வந்து நிற்குறாங்க சிபாரீசு வேண்டி? நீங்க சாதிச்சிட்டீங்க!"