3 இலக்கியாவின் நிலைப்பாடு

1.3K 58 3
                                    

3 இலக்கியாவின் நிலைப்பாடு 

வாழ்க்கை போகும் பாதையில் செல்ல முகிலன் தீர்மானித்து விட்டான் என்ற போதிலும், அவன் திருமணம் செய்து கொள்ள தயாராய் இருப்பானா என்பது சந்தேகம் தான் என்று எண்ணினான் இளங்கோ. அவன் எண்ணியபடியே முகிலனின் அடுத்த வார்த்தைகள் அவனுக்கு பதில் அளித்தது.

"எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல" என்றான் சாதத்தை பிசைந்தபடி.

இளஞ்செழியனும் ஆதிரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"என்ன இருந்தாலும் நான் ஒரு கொலைகாரன். நீங்க எனக்காக யார்கிட்டயும் பொண்ணு கேட்டு உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க" என்றான்.

ஆதிரை மென்று விழுங்கினார். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் விளங்கியவன் அவரது மகன்! இன்று அவன் இப்படி இயலாமையுடன் பேசுவதை அவரால் பொறுக்க முடியவில்லை.

"நான் எந்த உறவுக்கும் இப்போ தயாரில்ல."

"நாங்க உன்னை கல்யாணத்துக்கு நிச்சயம் கட்டாயப்படுத்த மாட்டோம்" என்றார் ஆதிரை.

"அது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது"

"ஆனா, எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இல்லப்பா" என்றார் வருத்தத்துடன்.

"நிச்சயமா இல்ல தான். ஆனா யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு நம்மால கணிக்க முடியாது. அந்த தகுதியெல்லாம் நான் இழந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு" என்ற போது அவனது பேச்சில் தாழ்வு மனப்பான்மை மேலோங்கியது.

"எதுக்காக முகிலா இப்படியெல்லாம் பேசுற? உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பொண்ணுங்க லைன்ல வந்து நிப்பாங்க" என்றான் இளங்கோ.

அவனை பார்த்து புன்னகைத்த முகிலன்,

"உளறுறதை நிறுத்திட்டு சாப்பிடு" என்றான்.

"ஆனா சின்னு..."

"அம்மா, நான் ஒரு விஷயத்தை உங்ககிட்ட ரொம்ப உறுதியா தெளிவுபடுத்த நினைக்கிறேன். எனக்கு கல்யாணம் வேண்டாம். அவ்வளவு தான். அதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி நான் பேச விரும்பல. ஏதாவது எமோஷனல் டிராமா பண்ணி என் மனசை மாத்திடலாம்னு மட்டும் நினைக்காதீங்க. அது நடக்காது. எனக்கு நீங்க இருக்கீங்க. அது போதும்"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now